கடந்த ஏப்ரல் 19ம் தேதி நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் நடிகர் விஷால், விஜய் பாணியில் சைக்கிளில் வந்து தனது வாக்கைச் செலுத்தியிருந்தார்.
அதுமட்டுமின்றி, விஜய் 2026-ல் தேர்தல் அரசியலில் களமிறங்குப் போவதாக அறிவித்தார். இதைத் தொடர்ந்து, விஷாலும் 2026ம் ஆண்டு தேர்தலில் களமிறங்கப் போவதாகக் கூறியுள்ளார். இதையடுத்து விஜய்யைப் பார்த்து அரசியலுக்கு வருவது, அவரைப் போலவே சைக்கிளில் வந்து ஓட்டுப் போடுவது என விஜய் பாணியை அப்படியே காப்பியடிக்கிறார் என்று சமூகவலைதளங்கலில் விஷால் பற்றிய ட்ரோல்கள் வைரலாகியிருந்தன.
இந்நிலையில் ‘ரத்னம்’ படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சியில் இது குறித்துக் கேட்கப்பட்ட கேள்விக்குப் பதிலளித்துள்ளார் நடிகர் விஷால்.
இதுகுறித்துப் பேசிய அவர், “விஜய், தனது ஆரம்பக் கால சினிமா வாழ்கையில் நிறைய விமர்சனங்களை எதிர்கொண்டிருக்கிறார். அவ்வளவு விஷயங்களை எதிர்கொண்டு இன்று தளபதியாக உங்கள் முன் நிற்கிறார். அது சாதாரண விஷயமில்லை. அதற்குக் காரணம் அவருடையத் தன்னம்பிக்கைதான். நீங்களெல்லாம் எப்படி அவரைப் பார்த்து இன்ஸ்பையர் ஆகிறீர்களோ அப்படித்தான் நானும் அவரைப் பார்த்து இன்ஸ்பையர் ஆகிறேன். அவரிடமிருந்து நிறையக் கற்றுக் கொள்கிறேன்.
என்கிட்ட கார் இல்லை. என்கிட்ட இருந்த வண்டி எல்லாத்தையும் விற்றுவிட்டேன். என் அம்மா, அப்பா எங்காவது செல்வதற்கு மட்டும்தான் கார் வைத்திருக்கிறேன். இன்றைய விலைவாசி உயர்வில் காரையெல்லாம் என்னால் பராமரித்து செலவு செய்ய முடியாது. சாலையிலிருக்கும் பள்ளங்களால் காரின் சஸ்பென்ஸன் சீக்கிரமாகப் பழுதாகிவிடுகிறது. அதற்கெல்லாம் அடிக்கடி செலவு செய்ய என்னிடம் காசில்லை. கொஞ்ச நாள்களாக சைக்கிளில்தான் எல்லா இடங்களுக்கும் செல்கிறேன்.
‘ரத்னம்’ படத்தின் படப்பிடிப்புத் தளத்திற்குக் கூட சைக்கிளில்தான் செல்வேன். ‘ரத்னம்’ படப்பிடிப்பு சமயத்தில் காரைக்குடியிலிருந்து திருச்சி வரை சைக்கிளில் சென்றேன். ‘ரத்னம்’ படத்திற்காக உடல் எடையைக் குறைக்க வேண்டியிருந்தது. அதிலிருந்து சைக்கிளில் எல்லா இடங்களுக்கும் சென்றே பழகிவிட்டேன். அப்படித்தான் ஏப்ரல் 19ம் தேதி நடந்த மக்களவைத் தேர்தலுக்கு வாக்களிக்க சைக்களில் வந்தேன்” என்று கூறியிருக்கிறார்.
2026-ல் தேர்தல் அரசியலுக்கு வருவது குறித்துப் பேசியவர், “எல்லோரும் மக்களுக்கு நல்லது செய்யவே அரசியலுக்கு வருகிறோம். இப்போதும் இருக்கும் அரசியல்வாதிகள் மக்களுக்கு நல்லது செய்தால் நாங்கள் ஏன் வரப்போகிறோம். வாக்களித்துவிட்டு நாங்கள் எங்கள் வேலையைப் பார்த்துக் கொண்டு போய்விடுவோம். இப்போது அரசியல் மாற்றம் நிச்சயம் தேவைப்படுகிறது. அதனால்தான் நானும், என்னைப் போன்றவர்களும் அரசியலுக்கு வருகிறோம்” என்று பேசியிருக்கிறார்.