புதுடெல்லி: அரவிந்த் கேஜ்ரிவாலின் கைதுக்கு டெல்லி மக்கள் தங்கள் வாக்குகளால் பதிலடி கொடுப்பார்கள் என டெல்லி கல்வி அமைச்சர் அதிஷி தெரிவித்துள்ளார்.
டெல்லி மதுபான ஊழல் வழக்கில் முதல்வர் கேஜ்ரிவால் கைது செய்யப்பட்டு திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரின் கைது வரவிருக்கும் மக்களவைத் தேர்தலில் எதிரொலிக்கும் என்றே கருதப்படுகிறது. கேஜ்ரிவால் கைது நடவடிக்கை அக்கட்சிக்கு பாதகமாகவும் அமையலாம், சாதகமாகவும் அமையலாம் எனக் கூறப்படுகிறது.
இந்நிலையில், கிழக்கு டெல்லியின் கோண்ட்லி தொகுதியில் திங்கள்கிழமை டெல்லி கல்வி அமைச்சர் அதிஷி செய்தியாளர்களிடம் பேசும்போது, “அரவிந்த் கேஜ்ரிவாலின் கைது நடவடிக்கையால் டெல்லி மக்கள் மிகுந்த சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். டெல்லி மக்களுக்கு அரவிந்த் கேஜ்ரிவால் ஒரு முதல்வர் மட்டுமல்ல, அவர் ஒரு மகன் மற்றும் சகோதரர் போன்றவர்.
டெல்லியில் உள்ள குழந்தைகளுக்கு நல்ல கல்வியை கொடுத்தவர். பெண்களுக்கு இலவசப் பேருந்துப் பயணம், மூத்த குடிமக்கள் யாத்திரை மேற்கொள்ள பல திட்டங்களை வகுத்தவர். 24 மணி நேரமும் மின்சாரம் கிடைக்க வழிவகை செய்தவர். இன்று, டெல்லி மக்கள் அரவிந்த் கேஜ்ரிவாலுடன் நிற்கிறார்கள், அவர் கைது செய்யப்பட்டதற்கு மக்கள் தங்கள் வாக்குகளால் பதிலளிப்பார்கள்” என்றார்.
தற்போது, கேஜ்ரிவாலின் ரத்த சர்க்கரை அளவு 320-ஐ கடந்த நிலையில் அவருக்கு இன்சுலின் செலுத்தப்பட்டுள்ளதாக திஹார் சிறை நிர்வாகம் தெரிவித்துள்ளது.