சென்னை: சொத்து குவிப்பு வழக்கில் இருந்து விடுவித்து 11 ஆண்டுகளுக்கு முன்பாக பிறப்பிக்கப்பட்ட உத்தரவுக்கு எதிராக தற்போது தாமாக முன்வந்து மறுஆய்வு செய்வதை தவிர்க்க வேண்டும் என ஓபிஎஸ் சகோதரர் ஓ.ராஜா தரப்பு மூத்த வழக்கறிஞர் வாதிட்டார்.
வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவிப்பில் ஈடுபட்டதாக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் போதுமான ஆதாரங்கள் இல்லை எனக்கூறி சிவகங்கை நீதிமன்றம் கடந்த 2012-ம் ஆண்டு அனைவரையும் விடுவித்து உத்தரவிட்டது. இந்த தீர்ப்பை மறுஆய்வு செய்யும் விதமாக சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதி என். ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து வழக்காக எடுத்து விசாரித்து வருகிறார்.
இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதி என். ஆனந்த் வெங்கடேஷ் முன்பாக நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஓ.பன்னீர்செல்வத்தின் சகோதரர் ஓ.ராஜா மற்றும் அவரது மனைவி சசிகலாவதி தரப்பில் மூத்த வழக்கறிஞர் சீனிவாசன் ஆஜராகி வாதாடினார்.
அப்போது அவர் தெரிவித்ததாவது: கடந்த 2012-ம் ஆண்டு சிவகங்கை நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை 11 ஆண்டுகள் கழித்து மறுஆய்வு செய்வதை இந்த நீதிமன்றம் தவிர்க்க வேண்டும். வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட இருவரும், பல சாட்சிகளும் மரணமடைந்து விட்டனர். நீண்ட இடைவெளிக்குப்பிறகு இந்த வழக்கு மறுஆய்வுக்காக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாறு வாதிட்டார்.
அதையடுத்து நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ், இந்த வழக்கில் லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில் வாதங்களை முன்வைக்க ஏதுவாக விசாரணையை வரும் ஏப்.30-ம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளார்.