பிரதமர் மோடி நேற்று முன்தினம் காங்கிரஸைச் சாடுவதாக மதத்தை முன்வைத்து பேசிய பிரசார பேச்சு இரண்டு நாள்களாகப் பெரும் விவாதப்பொருளாக இருக்கிறது. அதாவது, நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கு முதல் உரிமை என்று காங்கிரஸ் கூறியதாகவும், குடிமக்களின் சொத்துகளை ஊடுருவல்காரர்களுக்கும், அதிக குழந்தைகளைப் பெற்றுக்கொண்டவர்களுக்கும் பகிர்ந்துகொடுப்பார்கள் என்று இஸ்லாமியர்களை குறிப்பிட்டும் மோடி பேசியிருந்தார்.
ஒரு பிரதமராக மோடியின் இத்தகைய பேச்சு முற்றிலும் வெறுப்புப் பேச்சு என்று பா.ஜ.க, அதன் கூட்டணிக் கட்சிகள் தவிர மற்ற அனைத்து தரப்பிலிருந்தும் கண்டனங்கள் வந்துகொண்டே இருக்கின்றன. தேர்தல் ஆணையமும் இதுவரை எந்தவொரு ரியாக்ஷனும் கொடுக்கவில்லை. இவ்வாறிருக்க, நேற்றைய தினம் உத்தரப்பிரதேசத்தில் இஸ்லாயமியர்கள் அதிகம் வசிக்கும் அலிகார் பகுதியில், `இஸ்லாமிய தாய்மார்களின் எதிர்காலத்தை பாதுகாப்பானதாக மாற்றியிருக்கிறோம்’ என மோடி பிரசாரம் செய்தார். இந்த நிலையில், ராஜஸ்தானில் இன்று மீண்டும் பிரசாரம் மேற்கொண்ட மோடி, உண்மையைக் கூறியதால் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பதற்றத்தில் இருப்பதாகவும், தைரியமிருந்தால் ஒப்புக்கொள்ளுங்கள் எனவும் சவால் விட்டிருக்கிறார்.
மாநிலத்தின் டோங் பகுதியில் நடைபெற்ற பாஜக பிரசாரத்தில் உரையாற்றிய மோடி, “காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது தங்களின் வாக்கு வங்கிக்காக, தலித் மற்றும் பிற்படுத்தப்பட்டோரின் இட ஒதுக்கீட்டை உடைக்க விரும்பினார் என்பதே உண்மை. அரசியல் சாசனத்துக்கு இது எதிரானது. நேற்று முன்தினம் இதே ராஜஸ்தானில் 90 வினாடியில் , உங்களின் சொத்துகளை பறித்து தங்களின் ஸ்பெஷல் நபர்களுக்கு பகிர்ந்தளிக்க காங்கிரஸ் சாதி அரசியல் செய்கிறது என்ற உண்மையை வெளிப்படுத்தினேன்.
அதனால், காங்கிரஸும், இந்தியா கூட்டணிக் கட்சிகளும் பதற்றத்திலிருக்கின்றனர். மோடியைத் திட்டுகிறார்கள். அவர்கள் ஏன் உண்மையைக் கண்டு அச்சப்படுகிறார்கள்… எதற்காக அவர்கள் உருவாக்கிய கொள்கையை அவர்களே மறைக்கிறார்கள்… எதனால் இப்பொது அதை ஏற்றுக்கொள்ள பயப்படுகிறீர்கள்… தைரியமிருந்தால் ஏற்றுக்கொள்ளுங்கள். உங்களை எதிர்கொள்ள நாங்கள் தயார்” என்று கூறினார். நேற்று முன்தினம் இந்துக்கள் அதிகம் வாழும் பகுதியில் ஒருவித பேச்சு, நேற்று இஸ்லாமியர்கள் வாழும் பகுதியில் ஒருவித பேச்சு, இன்று இந்துக்கள் அதிகம் வாழும் பகுதியில் மீண்டும் அதே தொனியில் பேச்சு என தொடர்ச்சியாக மோடி செய்துவருவதை `வெறுப்புப் பேச்சின் உச்சம்’ என எதிர்க்கட்சியினர் விமர்சித்துவருகின்றனர்.