ஒவ்வொரு கார் நிறுவனங்களும் செலிபிரிட்டிகளை அப்ரோச் செய்து, தங்கள் கம்பெனிக்கு பிராண்ட் அம்பாஸடர் ஆக்குவது வழக்கம். தங்கள் நிறுவனத் தயாரிப்புகளின் லாஞ்ச் ஈவென்ட், கம்யூனிட்டி நிகழ்ச்சி, கண்டுபிடிப்பு நிகழ்வுகள் போன்ற எல்லாவற்றுக்கும் அந்த விஐபிதான் ப்ரொமோஷன் செய்து தர வேண்டும்.
இத்தனை ஆண்டுக்கு என்கிற அடிப்படையில் கான்ட்ராக்ட் முறையில் விஐபிகள் ஒப்பந்தம் செய்யப்படுவார்கள். பிஎம்டபிள்யூவுக்கு சச்சின், ஆடிக்கு கோலி, ஹூண்டாய்க்கு ஷாருக் கான் என்று கார் நிறுவனங்களுக்குப் பல விஐபிக்கள் பிராண்ட் அம்பாஸடர்களாக வேலை செய்து வருகிறார்கள்.
சில மாதங்களுக்கு முன்பு பாலிவுட் நடிகர் ஷாருக் கானுடன் சேர்த்து தீபிகா படுகோனை பிராண்ட் அம்பாஸடர் ஆக்கியிருந்தது ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனம்.
அப்படி நம் ஊரில் கடை விரித்திருக்கும் பிரெஞ்சு நிறுவனமான சிட்ரன் என்கிற கார் கம்பெனி, ‛தல’ தோனியை பிராண்ட் அம்பாஸடர் ஆக ஒப்பந்தம் செய்திருக்கிறது. இதன் முதல் கட்டமாக, ‛இந்தாங்க பிடிங்க’ என்று 7 கோடி ரூபாய் தொகையையும் கொடுத்திருக்கிறதாம் சிட்ரன் நிறுவனம்.
Stellantis பிராண்ட் கம்பெனியான சிட்ரன், இதே ஏப்ரல் மாதம் 21-ம் தேதிதான் நம் இந்தியாவுக்குள் நுழைந்து, 2021-ல் இருந்து கார்களை விற்பனை செய்து வருகிறது. இத்தாலிய – அமெரிக்கக் கூட்டு நிறுவனமான Fiat Chrysler Automobiles India மற்றும் பிரெஞ்சு PSA குரூப் இரண்டும் இணைந்து உருவாக்கியதுதான் ஸ்டெல்லான்ட்டிஸ். இது உலகின் முக்கியமான ஒரு பன்னாட்டு வாகன உற்பத்தி நிறுவனம். ஜீப் நிறுவனத்தின் காம்பஸ், செரோக்கி, மெரிடியன் போன்ற கார்களையும் இந்த ஸ்டெல்லான்ட்டிஸ்தான் இந்தியாவில் விற்பனை செய்து வருகிறது.
முதல் காராக C5 Aircross எனும் காரை, சிட்ரன் லாஞ்ச் செய்தது. ஆனால், சிட்ரன் C5 சொல்லிக் கொள்ளும்படி விற்பனை இல்லை. காரணம், இதன் விலை. இதன் தற்போதைய மாடலின் ஆன்ரோடு விலை சுமார் 40 லட்சம் வருகிறது. இந்த விலைக்கு ஒரு டொயோட்டா ஃபார்ச்சூனர் அல்லது இரண்டு மஹிந்திரா ஸ்கார்ப்பியோ கார்கள் வாங்கிவிடலாம் என்பதே இதன் மைனஸாக இருந்தது.
மேலும், சிட்ரன் நிறுவனத்தின் சர்வீஸ் நெட்வொர்க்கும் பெரிதாகப் பேசப்படவில்லை. ஆனால், இந்த சிட்ரனைப் பொருத்தவரை நமக்கு ஒரு பெருமை என்னவென்றால், நம் தமிழ்நாட்டின் திருவள்ளூரில் உள்ள PSA மோட்டார் ப்ளான்ட்டில் இருந்துதான் C3, C5 மாடல்களை ரோல்அவுட் செய்து வருகிறது சிட்ரன்.
C5 ஏர்க்ராஸ் காரோடு சேர்த்து, சிட்ரனில் இருந்து இப்போது C3 ஹேட்ச்பேக், C3 Aircross எஸ்யூவி மற்றும் ஒரு எலெக்ட்ரிக் காரான eC3 என்று 4 கார்கள் மட்டுமே விற்பனையில் இருக்கின்றன. மார்க்கெட்டில் நுழைந்த காலகட்டத்தில் இருந்து இன்றுவரை, 4 கார்களையும் சேர்த்து இந்தியாவில் மொத்தமாகவே சுமார் 17,000 யூனிட்களைத்தான் விற்பனை செய்திருக்கிறது சிட்ரன். அதாவது ஆவரேஜாக மாதம் 400 கார்களை விற்பதே பெரும்பாடாக இருக்கிறது சிட்ரனுக்கு.
இந்த நிலையில் இந்தியாவின் மோஸ்ட் வான்டட் செலிபிரிட்டியான ‛தல’ தோனியை பிராண்ட் அம்பாஸடர் ஆக்கி, கொஞ்சம் முன்னுக்கு வரலாமா என்று யோசித்திருக்கும் சிட்ரன் வெற்றி பெற வாழ்த்துகள்!
ஒருவேளை – சிட்ரனில் இருந்து அடுத்து வெளிவரப் போகும் (Basalt) என்கிற க்ராஸ்ஓவரை, தோனி அறிமுகப்படுத்துவாரோ? தோனியின் ராசி சிட்ரனுக்குக் கைகொடுக்குமா பார்க்கலாம்!