‘கில்லி’ திரைப்படம் வெளியாகி 20 ஆண்டுகள் ஆகிவிட்டன. தற்போது மீண்டும் திரையரங்குகளில் ரீ-ரிலீஸ் ஆகியிருக்கிறது.
ரீ-ரிலீஸிலும் இத்திரைப்படம் கொண்டாடப்பட்டுக் கொண்டிருக்கிறது. லவ், ஆக்ஷன், காமெடி என கமெர்சியலின் அத்தனை அம்சங்களிலும் ஓங்கி நிற்கும் ‘கில்லி’ திரைப்படம் அப்போதே அதிக பொருட்செலவில் எடுக்கப்பட்டதாம். ‘கில்லி’ திரைப்படத்தின் நினைவுகளை ரீவைண்ட் செய்து பேசுவதற்காக அத்திரைப்படத்தின் தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னத்தை சந்தித்துப் பேசினோம்.
பேசத் தொடங்கிய அவர், ” முன்னாடிலாம் விநியோகஸ்தர்களுக்கு 5 வருஷத்துக்கு உரிமம் கொடுத்தோம். அந்த காலம் முடிஞ்சதுக்குப் பிறகு மறுபடியும் படத்தோட உரிமம் எங்கிட்ட வந்திரும். முன்னாடி ரீல்ல ‘கில்லி’ திரைப்படம் இருந்தது. இப்போ டிஜிட்டலுக்கு மாற்றி மொத்தமாக உலகம் முழுவதும் ரிலீஸ் பண்ணியிருக்கோம். ‘நான் கில்லி படத்தை ரீ-ரிலீஸ் பண்ணப்போறேன்’னு சொன்னதும் பலர் வேண்டாம்னுதான் சொன்னாங்க. எல்லோரோட போன்லையும் இந்தத் திரைப்படம் இருக்கு. டி.வி லையும் பல முறை படத்தை போட்டுடாங்க. இனிமேல் யார் வந்து தியேட்டர்ல பார்ப்பாங்கனு கேட்டாங்க. ஆனா, அப்போ தனியா டி.வில பார்த்திருப்பாங்க. இந்த மாதிரியான சமயத்துல இளைஞர்கள் பலர் நண்பர்களோட சேர்ந்து வந்து கொண்டாடி படத்தைப் பார்ப்பாங்க. ‘கில்லி’ திரைப்படம் ரிலீஸ் ஆகுற சமயத்துல ஐந்து வயசு இருந்தவங்களுக்கு இப்போ 25 வயசு இருக்கும்.
அவங்களுக்கு ஒரு நல்ல தியேட்டர் அனுபவத்தை இந்த ரீ-ரிலீஸ் உறுதியா கொடுக்கும். தெலுங்கு ‘குஷி’ திரைப்படத்தை ரீ-ரிலீஸ் பண்ணின சமயத்துல பலர் இப்படியான விஷயங்களை என்கிட்ட சொன்னாங்க. தெலுங்குல மகேஷ் பாபு நடிச்சிருந்த ‘ஒக்கடு’ திரைப்படம் பெரியளவுல ஹிட்டாச்சு. அந்தத் திரைப்படத்தை முதல்ல விஜய்யும் அவருடைய தந்தையும் போய் பார்த்துட்டு என்கிட்ட அந்த படத்தைப் பத்திச் சொன்னாங்க. நானும் அதுக்குப் பிறகு ‘ஒக்கடு’ படத்தை பார்த்தேன். அந்த காலத்திலேயே ‘கில்லி’ திரைப்படம் அதிக பொருட்செலவுல எடுக்கப்பட்ட திரைப்படம்.
அப்போ இருக்கிற போட்டியில ‘ஒக்கடு’ படத்தோட ரீமேக் உரிமத்தை அதிக விலை கொடுத்துதான் வாங்கினோம். இந்தப் படத்துல நடிகையா யாரை நடிக்க வைக்கலாம்னு யோசிச்சிட்டு இருந்தோம். அந்த சமயத்துல நடிகை த்ரிஷாவை தெலுங்குல நாங்கதான் அறிமுகப்படுத்தியிருந்தோம். ‘கில்லி’ திரைப்படத்துக்குப் பிறகு த்ரிஷாவுக்கு நல்ல பெயருமே கிடைச்சது. மேலும், முதல் முறையாக இந்தப் படத்துலதான் விஜய்கூட சேர்ந்து நடிச்சிருந்தாங்க. ரொம்பவே சூப்பரா நடனமும் ஆடியிருந்தாங்க. இந்த படத்தோட ஷூட்டிங் சமயத்துல விஜய், ‘நான் பண்ணினதுலேயே அதிகமான பொருட்செலவுல எடுக்கிற திரைப்படம் இதுதான்’னு சொன்னார்.
இந்த படத்தோட ஒரு சீக்குவன்ஸ் 16 நாள் நாங்க ஷூட் பண்ணினோம். 20 வருஷம் ஆகிருச்சு. இப்போ விஜய் சாரோட கரியரை பார்க்கிறதுக்கு ரொம்பவே சந்தோஷமாக இருக்கு. முக்கியமாக இந்த படத்துக்காக 7.5 ஏக்கர்ல செட் போட்டோம். அதாவது மொட்டைமாடி செட் உருவாக்கினோம். வீடுகளுக்கு பின்னாடி கடல், லைட் ஹவுஸ் தெரியணும். அதுக்காக மகாபலிபுரத்துல போய் செட் போட்டோம். இந்த படத்துக்கு வித்யாசாகர் சார் பயங்கரமாக பாடல்கள் போட்டு தந்தாரு. இந்த படம் மட்டுமில்ல என்னுடைய தூள், ரன் படத்துக்கும் ஹிட் பாடல்கள் கொடுத்தார். ” என்றவரிடம் கில்லி திரைப்படத்தின் பாக்ஸ் ஆபிஸ் வசூல் குறித்து கேட்டோம்.
அதற்கு பதிலளித்த அவர், ” நான் இந்தியன் மாதிரியான பெரிய பட்ஜெட் திரைப்படத்துக்குகூட வசூல் குறித்தான விளம்பரங்கள் பண்ணினது இல்ல. இப்போகூட ‘கில்லி’ திரைப்படம் இத்தனை தியேட்டர்ல ரீ-ரிலீஸ் ஆகுதுன்னு விளம்பரம் பண்ணலாம். ஆனா, நான் பண்ணமாட்டேன். பலர் ‘Gross’, ‘Net’ ஆகியவற்றை பார்க்காமல் இவ்வளவு வசூல் ஆகியிருக்குனு எழுதுறாங்க. இதுமட்டுமில்ல, புது படங்களைத் தாண்டி ரீ-ரிலீஸ் படங்களுக்கு 70 சதவிகிதம் ஷேர் வச்சுகிட்டு 30 சதவிகிதம் ஷேர்தான் மல்டிபிளக்ஸ் தர்றாங்க. கூட்டம் வராத சமயத்துல இந்த மாதிரியான ஷேர் விகிதம் இருக்கலாம். ஆனா, தியேட்டர் ஹவுஸ்புல்லாக போகிற சமயத்துல புதிய திரைப்படம் பழைய திரைப்படம் எல்லாம் ஒன்னுதான். நியாயமாக இருபக்கமும் 50 சதவிகிதம் ஷேர் இருந்தால்தான் சரியாக இருக்கும்.” என்றார்.
மேலும், சிவகாசி திரைப்படத்திற்குப் பிறகு மீண்டும் விஜய்யுடன் இணைவதற்கு திட்டங்களைத் தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் வைத்திருந்தார். பின்னர் அது டேக் ஆஃப் ஆகவில்லை. இது தொடர்பாக அவர் பேசுகையில், ” ஆமா, இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்துல விஜய் வச்சு ஒரு படம் பண்ண வேண்டியது. ஆனா, அந்த சமயத்துல அது நடக்கல.
அதுக்குப் பிறகு அஜித் சார்கூட சேர்ந்து படங்கள் பண்ணினேன்.” என்றவரிடம் 7ஜி ரெயின்போ காலனி திரைப்படத்தின் இரண்டாவது பாகம் குறித்து கேட்டோம். அதற்கு பதிலளித்த அவர், ” ஷூட்டிங் தொடங்கிட்டோம். இப்போ மியூசிக் வேலைகள் போயிட்டு இருக்கு.” என்றார். இந்தியன் திரைப்படத்தின் இரண்டாவது பாகத்திற்கு அதிகப்படியான எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
இந்தியன் திரைப்படத்தின் முதல் பாகத்தை தயாரித்தவரும் இவர்தான். இந்தியன் -2 திரைப்படத்தை இவர் தயாரிக்காததற்கான காரணத்தை கேட்கையில், ” காரணம் எதுவும் இல்ல. லைகா தயாரிப்பு நிறுவனம் இது தொடர்பாக எங்ககிட்ட கேட்டாங்க. தெலுங்குல் நாங்க பண்ணிக்கலாம்னு தமிழ்ல அவங்ககிட்ட கொடுத்தோம்.” எனப் பேசினார்.