ஜெய்ப்பூரில் நடைபெற்ற நேற்றைய போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின.
இதில் ராஜஸ்தான் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஏழாவது போட்டியை வெற்றி பெற்று 14 புள்ளிகள் பெற்று தற்போது புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறது. இந்த நிலையில் ஐந்து முறை சாம்பியன் ஆன மும்பை இந்தியன்ஸ் அணி நடப்பு தொடரில் ஐந்தாவது தோல்வியைத் தழுவியிருக்கிறது.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிடம் தோல்வியைத் தழுவிய பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா அணியின் தோல்வி குறித்துப் பேசியிருக்கிறார். “ஆரம்பத்தில் நாங்களே சில தவறுகளைச் செய்து மாட்டிக்கொண்டோம். திலக், நேஹல் சிறப்பாக பேட்டிங் செய்தனர். இருந்தாலும் கடைசியில் சரியாக விளையாடி 10-15 ரன்கள் கூடுதலாக எடுத்திருக்கலாம்.
இந்தப் போட்டியில் பவுலிங், ஃபீல்டிங் அந்தளவுக்குச் சிறப்பானதாக இல்லை. இதே போன்று பந்துவீச்சிலும் ஸ்டம்ப்க்குக் குறி வைத்து பந்து வீசியிருக்க வேண்டும். நாங்கள் பவர் பிளேவில் அடிப்பதற்கு ஏதுவாக பந்துகளை வீசி விட்டோம். நிச்சயமாக இது எங்களுடைய சிறந்த நாள் கிடையாது. நாங்கள் சிறப்பாக விளையாடவில்லை.
இனி வரும் போட்டிகளில் மும்பை அணியில் உள்ள வீரர்கள் அனைவரும் தங்களது குறைகளை உணர்ந்து அதனை சரிசெய்ய முயற்சிக்க வேண்டும். ஒரு சில போட்டிகளில் சரியாக விளையாடவில்லை என்றதும் அணியை விட்டு வீரர்களை நீக்குவது என்பது எனக்குப் பிடிக்காது. எல்லா வீரர்களையும் ஆதரிப்போம்” என்று கூறியிருக்கிறார்.