காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், வயநாடு நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல் காந்தி மீண்டும் உத்தரபிரதேசம் அமேதி (AMETHI) நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடவிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. ராகுல் காந்தி கடந்த நான்கு நாடாளுமன்றத் தேர்தலில் தொடர்ந்து அமேதி தொகுதியில் போட்டியிட்டு மூன்று முறை வென்றிருக்கிறார்.
2019-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலின்போதும், பா.ஜ.க சார்பில் அவரை எதிர்த்து போட்டியிட்ட அமைச்சர் ஸ்மிருதி இராணியிடம் 55,120 வாக்குகள் வித்தியாசத்தில் அமேதி தொகுதியின் நான்காவது முறையாக நாடாளுமன்ற உறுப்பினராகும் வாய்ப்பை தவறவிட்டார். இந்த நிலையில், காங்கிரஸ் கட்சி சார்பில் இன்னும் அமேதி தொகுதியின் வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை. அதேநேரம் அமேதியில் அமைந்திருக்கும் ராகுல் காந்தியின் வீட்டை சுத்தம் செய்து சீரமைக்கும் பணிகளின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியிருக்கிறது.
ஆகையால் ராகுல் காந்தி மீண்டும் அமேதியில் போட்டியிட போகிறார் என தகவல்கள் கசிந்திருக்கிறது.
இதற்கிடையில் தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி,“அமேதியின் வளர்ச்சிக்கு காங்கிரஸ், ராகுல் காந்தி எதுவும் செய்யவில்லை. இந்த மக்களின் கழிவறை தேவை, சுத்தமான தண்ணீர் போன்ற அத்தியாவசிய தேவைகளைக் கூட ராகுல் காந்தியால் பூர்த்திசெய்ய முடியவில்லை. என்னுடைய அம்மா மத்தியில் ஆட்சி நடத்தவில்லை, ஆனால் ராகுலின் அம்மா மத்தியில் ஆட்சி நடத்தியிருக்கிறார்.
இருப்பினும் ஏன் அமேதிக்கு ஒன்றும் செய்யவில்லை. மோடி அரசு வந்த பிறகு தான் அமேதி மக்களுக்கு நல்ல தண்ணீர் கிடைத்திருக்கிறது. தற்போது ராகுல் காந்தி வயநாட்டில் தேர்தலை முடித்துவிட்டு, அமேதியில் போட்டியிட வருவார்” எனக் குறிப்பிட்டிருந்தார்.
இந்த நிலையில், ராகுல் காந்தி அமேதி தொகுதியில் போட்டியிடுவது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய தேசிய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.எல்.சி தீபக் சிங்க், “அமேதியில் ராகுல் காந்தியின் வீட்டின் பணி நடைபெறுவது வழக்கமானதுதான். அவர் அமேதியில் போட்டியிட்டாலும், போட்டியிடாவிட்டாலும் அவர் அமேதிக்கு வருவார் தேர்தல் பரப்புரை செய்வார்.” எனக் குறிப்பிட்டார்.
இன்னும் அமேதி தொகுதியில் ராகுல் காந்தி போட்டியிடுவது தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகவில்லை என்றாலும், அந்த பகுதி காங்கிரஸ் தொண்டர்கள் ராகுல் காந்தி போட்டியிட வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்களாம்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3OITqxs