பெங்களூரு: காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளரும் அக்கட்சியின் கர்நாடக மாநில தேர்தல் பொறுப்பாளருமான ரன்தீப் சுர்ஜேவாலா பாஜக ஆட்சியில் கர்நாடகத்துக்கு கிடைத்த வளர்ச்சி மாடல் பலன்கள் எல்லாம் காலி சொம்புக்கு சமமானது என்று சாடியுள்ளார்.
மக்களவைத் தேர்தல் 2 ஆம் கட்ட வாக்குப்பதிவுக்கான பிரச்சாரம் நேற்று மாலை ஓய்ந்தது. கர்நாடகாவில் உள்ள 28 மக்களவைத் தொகுதிகளுக்கும் இரண்டு கட்டங்களாக ஏப்ரல் 26 மற்றும் மே 7 ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. 2019 மக்களவைத் தேர்தலில் கர்நாடகாவில் பாஜக 25 தொகுதிகளில் தனித்து வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், ஹுப்பாளியில் செய்தியாளர்களை சந்தித்த ரன்தீப் சுர்ஜேவாலா, “பாஜக தலைமையிலான மத்திய அரசு கர்நாடகாவுக்கு கொடுத்தது எல்லாம் காலிச் சொம்புதான். இந்த முறை கர்நாடகாவில் 6.5 கோடி மக்களும் அந்த காலிச் சொம்பையே பாஜகவுக்கு திருப்பிக் கொடுக்க முடிவு செய்துள்ளனர்.
பிரதமரும், பாஜகவும் கடந்த 10 ஆண்டுகளில் கர்நாடகாவுக்கு எதுவும் செய்ததில்லை. கர்நாடக மக்கள் கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸை ஆட்சியில் அமர்த்தியதிலிருந்தே பிரதமரும், அமித் ஷாவும் கர்நாடக மக்கள் மீது வெறுப்பைக் கொண்டுள்ளனர். உரிய வரிகளை செலுத்திய கர்நாடக மக்களுக்கு அவர்கள் காலி சொம்பைக் கொடுத்துள்ளார்கள். அதனால். பாஜகவை ‘பாரதிய சொம்புக் கட்சி’ என்று தான் அழைக்க வேண்டும்.
இன்று கர்நாடகாவில் மக்கள் மன்றத்தில் இரண்டு சொம்புகள் உள்ளன. அதில் ஒன்று காங்கிரஸின் உத்தரவாத மாதிரி சொம்பு, இன்னொன்று பாஜகவின் காலி சொம்பு. மாநிலத்தில் 40 சதவீத கமிஷன் ஆட்சி நடத்தியவர்கள் எங்களின் வாக்குறுதிகளை கிண்டல் செய்தனர். நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் கிரஹலக்ஷ்மி, கிரஹஜோதி, சக்தி, அன்ன பாக்யா, யுவ நிதி ஆகிய ஐந்து திட்டங்களை செயல்படுத்துவோம் என வாக்குறுதி கொடுத்தோம். அதன்படி, இதுவரை கர்நாடக அரசால் ரூ.58 கோடி இதற்காக 4.5 கோடி கன்னடர்களின் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்பட்டுள்ளது.
கர்நாடகாவில் கடும் வறட்சி நிலவுகிறது. இது குறித்து 6 மாதங்களுக்கு முன்னரே நாம் அதிகாரபூர்வமாக அறிவித்தோம். மாநில அமைச்சர்கள் மத்திய உள்துறை செயலரைச் சந்தித்து நிவாரணத் தொகை கோரினர். முதல்வரும் இதே கோரிக்கையை வலியுறுத்தி பிரதமர், உள்துறை அமைச்சரை சந்தித்தார். ஆனால் 2023 செப்டம்பரில் இருந்து இதுவரை அந்த கோரிக்கைகள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் கன்னட மக்களை மோடியும், அமித் ஷாவும் பழிவாங்குகின்றனர். மத்திய அரசு கர்நாடகாவை வெறுக்கிறது என நினைக்கிறேன்.
15-வது நிதி கமிஷனின் விதிமுறைகளின் படி ஒரு மாநிலம் வறட்சி நிலவுவதாக அறிவித்தால் அதற்கு உரிய பணத்தை கொடுக்க வேண்டும். ஆனால் அமித் ஷா நமக்கு காலி சொம்பை கொடுத்துள்ளார். வறட்சியை சமாளிக்க கர்நாடக அரசு ரூ.58 ஆயிரம் கோடி கோரினால் மோடி நமக்கு காலி சொம்பு தருகிறார். ஜிஎஸ்டி வரிப் பணத்தைக் கேட்டால் மோடி நமக்கு காலி சொம்பு தருகிறார். பத்ரா அணைக்கு நிதி கேட்டால் மோடி திரும்பவும் காலி சொம்பு தருகிறார். ஒவ்வொரு 100 ரூபாய் வருவாய்க்கும் மத்திய அரசு நமக்கு வெறும் 13 ரூபாய் மட்டுமே திரும்பத் தர்கிறது. அதுமட்டுமல்லாமல் மேகேதாட்டு, மகாதயி கலசா – பதூரி திட்டங்களுக்கு அனுமதி அளிக்க மத்திய அரசு மறுக்கிறது. இந்த காலி சொம்புகளுக்கு கர்நாடக மக்கள் காலி சொம்பை திருப்பதித் தருவார்கள்” எனப் பேசினார்.