பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை தேனியில் பிரசாரம் செய்தபோது, “ஜூன் 4-ம் தேதிக்குப் பிறகு எடப்பாடி தலைமையில் அ.தி.மு.க இருக்காது. டி.டி.வி.தினகரன் தலைமையில்தான் இனி கட்சி செல்லும்” என்று பேசினார். அதைக் கேட்டு ஏகக் கடுப்பாகிவிட்டாராம் பன்னீர். தேர்தல் ஓய்ந்த பிறகு டெல்லி பா.ஜ.க நிர்வாகி ஒருவரிடம் பேசிய பன்னீர், “ராமநாதபுரம் தொகுதியில், என்மீது அ.தி.மு.க-காரர்களே பலர் பரிவு காட்டி எனக்கு ஒத்துழைக்கத் தொடங்கினார்கள்.
ஆனால், அந்த நேரம் பார்த்து, ‘அ.தி.மு.க எனும் கட்சியே இனி இருக்காது’ என்று அண்ணாமலை பேசியதைக் கட்சியில் யாரும் ரசிக்கவில்லை. உங்களுடன் கூட்டணியில் இருப்பதால், அண்ணாமலையின் சிறுபிள்ளைத்தனமான பேச்சு என்னையும் சேர்த்துத் தொடர்ச்சியாக பாதிக்கிறது. தவிர, தினகரன் தலைமையில் அ.தி.மு.க சென்றுவிடும் என முடிவெடுப்பதற்கு அண்ணாமலை யார்… கட்சியின் ஒருங்கிணைப்பாளராக நான் இருக்கிறேன். என்னை ஒரு பொருட்டாகவே மதிக்காமல், அவர் ஏன் இப்படிப் பேசுகிறார்?” என்று சொல்லி, வருந்தி முகம் சிவந்தாராம் பன்னீர்!
தலைநகருக்கு அருகிலுள்ள நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்ட, மரத்தடி கடவுள் பெயரைக்கொண்ட பா.ஜ.க பிரமுகரின் தேர்தல் வேலைகளுக்காக, கட்சியிலிருந்து சுமார் எட்டு ஸ்வீட் பாக்ஸுகள் வரை ஒதுக்கியிருக்கிறது மாநிலத் தலைமை. அந்த பாக்ஸுகளைப் பெற்றுக்கொண்ட தொகுதிப் பொறுப்பாளர், அவற்றில் இரண்டு ஸ்வீட் பாக்ஸுகளைத் தன்னுடைய சொந்தப் பயன்பாட்டுக்காகத் தனியே எடுத்துவைத்துவிட்டு, மீதத்தைத்தான் வேட்பாளரிடம் கொடுத்திருக்கிறார். தேர்தல் நேரத்திலேயே இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது. ஆனால், தேர்தல் முடியட்டும் என அப்போதைக்கு அந்தப் பிரச்னையைக் கிடப்பில்போட்ட வேட்பாளர் தரப்பு, தற்போது கமலாலய சீனியரிடம் புகாராகக் கொடுத்திருக்கிறது. உடனே தேர்தல் பொறுப்பாளரிடம் விசாரணை செய்தது மாநிலத் தலைமை.
கிணறு வெட்ட பூதம் கிளம்பிய கதையாகப் பல விஷயங்கள் கிளம்ப, இப்போது மற்ற தொகுதிப் பொறுப்பாளர்களிடமும் விசாரணையில் இறங்கியிருக்கிறதாம் தலைமை. பெரும்பாலான தொகுதிகளில், கொடுக்கப்பட்ட இனிப்புகள் முழுவதும் விநியோகிக்கப்படாமல், பொறுப்பு நிர்வாகிகளாலேயே அமுக்கப்பட்ட விவரங்கள் தெரியவந்திருக்கின்றனவாம். கடுப்பான மாநிலத் தலைமை, ஒவ்வொரு தொகுதியின் பொறுப்பாளரும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட ஸ்வீட் பாக்ஸுகளின் கணக்கு வழக்குகளை உடனடியாகத் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டிருக்கிறதாம்!
கொஞ்சம் லேட் என்றாலும், சுவாரஸ்யமான செய்தி. தேர்தல் நாளன்று, தன் பொறுப்பிலிருக்கும் மாவட்டத்தில் குறைவாக வாக்குகள் பதிவாகிவருவதை டி.வி-யில் பார்த்து டென்ஷாகிவிட்டாராம் அந்த மாஜி பவர் அமைச்சர். உடனடியாக, சில அதிகாரிகள் மூலம் தொகுதியிலுள்ள நிர்வாகிகளை எச்சரித்திருக்கிறார். “அண்ணன் எப்போ சறுக்குவான், திண்ணை எப்ப காலியாகும்னு நிறைய பேரு காத்துக்கிட்டிருக்காங்க. தொகுதி நம்ம கையைவிட்டுப் போச்சுன்னா, அதையே காரணமாக்கி என்னோட பதவிக்கு வேட்டு வெச்சுருவாங்க.
ஒழுங்கா தொகுதியில எல்லாரையும் ஓட்டுப்போட அழைச்சுட்டுப் போற வழியப் பாருங்க” எனக் கடிந்துகொண்டாராம். உடனே கம்பெனியார் கூடுதல் வேகத்துடன் சுற்றிச் சுழல… அதன் பிறகே தொகுதியில் வாக்குச் சதவிகிதம் ஏறியதாம்!
மயிலாடுதுறைத் தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் சுதா, ‘மகிளா காங்கிரஸின் தமிழ் மாநிலத் தலைவர் பதவி’ வகித்துவந்தார். தற்போது அந்தப் பொறுப்புக்கு ஹசீனா என்பவரை நியமனம் செய்திருக்கிறது மாநிலத் தலைமை. இதில் கடுப்பான சுதா, “தேர்தல் முடிவு வருவதற்குள் அவசரமாக என்னை நீக்குவதற்கு என்ன காரணம்?” எனச் செல்வப்பெருந்தகைத் தரப்பிடம் கேட்டிருக்கிறார். “காங்கிரஸ் கட்சியில் சிறுபான்மையினருக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுவதில்லை என நிலவும் கருத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாகவே மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை இப்படியொரு நடவடிக்கையை எடுத்திருக்கிறார்” என விளக்கம் கொடுத்திருக்கிறார்கள் செல்வப்பெருந்தகைத் தரப்பில்.
மற்றொரு தரப்பிலோ, “தேர்தல் முடிவுகள் வருவதற்கு முன்பே முக்கியப் பதவிகளில் தன்னுடைய ஆதரவாளர்களை நியமனம் செய்து, கட்சியைத் தன் முழுக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் முயற்சியில் இருக்கிறார் செல்வப் பெருந்தகை. அதன் முன்னோட்டம்தான் இது. தலைமையில் ஆட்கள் மாறினாலும், கோஷ்டி சேர்க்கும் வேலை இங்கே மாறப்போவதில்லை” எனக் கடுப்போடு முணுமுணுக்கிறார்கள் கதர்ச் சட்டை சீனியர்கள்!
திருச்சி நாடாளுமன்றத் தொகுதியில் அ.தி.மு.க சார்பில் போட்டியிட்ட கருப்பையா, ஆரம்ப நாள்களில் களம் தனக்குச் சாதமாக இருப்பதாக நம்பினார். அந்த உற்சாகத்தில், கட்சி நிர்வாகிகள், கூட்டணிக் கட்சி நிர்வாகிகளுக்கெல்லாம் ‘தாராளம்’ காட்டிவந்தார். தேர்தல் நடப்பதற்கு நான்கு நாள்களுக்கு முன்பு, கறம்பக்குடி பகுதியில் 30 கிடாக்களை வெட்டிக் கறிவிருந்து வைத்து, நிர்வாகிகளை உற்சாகப்படுத்தினார். ஆனால், வாக்குப்பதிவுக்குப் பிறகு வந்த ரிப்போர்ட்டுகளில் ‘களம் அவருக்குச் சாதகமாக இல்லை’ என்று சொல்லப்பட்டிருக்கிறது.
ஆனாலும், தேர்தலுக்கு அடுத்த நாள் அவருக்குச் சொந்தமான மண்டபத்தில் கட்சி நிர்வாகிகளுக்கு ‘தேர்தல் கறிவிருந்து’ வைத்திருக்கிறார். விசாரித்தால், “நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றிபெற வேண்டும் என்பதற்காக இந்தத் தேர்தலில் போட்டியிடவில்லை. சட்டமன்றத் தேர்தலில் சீட் பெற வேண்டும் என்பதற்காகவே அண்ணன் தேர்தலில் போட்டியிட்டார். எனவே, இந்தத் தேர்தலில் தனக்காக உழைத்த நிர்வாகிகளைத் தொடர்ந்து தன் வசம் வைத்துக்கொள்ளவே தேர்தலுக்குப் பின்னும் கறிவிருந்து வைத்திருக்கிறார்” என்று ரகசியம் உடைக்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள்!
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3OITqxs