ஜிம்பாப்வேயின் முன்னாள் கிரிக்கெட் வீரர் கய் விட்டல் (வயது 51). இவர் ஜிம்பாப்வேயின் ஹூமானி பிராந்தியத்தில் உள்ள பபலோ ரேஞ்சில் வனவிலங்குகள் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மண்டலத்தை நிர்வகித்து வருகிறார். இங்குள்ள பாதை வழியாக கடந்த திங்கட்கிழமை கய் விட்டல் மலையேற்றத்தில் ஈடுபட்டார். அப்போது ஒரு சிறுத்தை திடீரென அவர் மீது பாய்ந்து தாக்கி உள்ளது. இதில் அவர் பலத்த காயமடைந்தார்.
அவருடன் சென்ற வளர்ப்பு நாய் குறுக்கே வந்து சிறுத்தையை எதிர்கொண்டு கடுமையாக போராடியது. இதனால் நாயையும் சிறுத்தை கடித்துள்ளது. பின்னர் அங்கிருந்து சென்றுவிட்டது. வளர்ப்பு நாய் குறுக்கே வந்து தடுத்து சிறுத்தையுடன் சண்டையிட்டதால் கய் விட்டல் அதிர்ஷ்டவசமாக உயிர்பிழைத்தார்.
சிறுத்தை தாக்கியதில் உடலில் ஆங்காங்கே சிராய்ப்பு ஏற்பட்டு, ரத்தம் கொட்டியது. சிறிது நேரத்தில் அங்கு வந்த மீட்புக்குழுவினர் அவரை மீட்டு ஹெலிகாப்டர் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. சிறுத்தை தாக்கியதில் காயமடைந்த வளர்ப்பு நாய்க்கும் சிகிச்சை அளிக்கப்பட்டது.
கய் விட்டல் காயமடைந்த நிலையில் மீட்கப்பட்டபோது எடுத்த புகைப்படம் மற்றும் மருத்துவமனையில் உள்ள புகைப்படத்தை அவரது மனைவி சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்களை பார்த்த பலரும், அவருக்கு ஆறுதல் தெரிவித்ததுடன், விரைவில் குணமடைய வேண்டிக்கொண்டனர்.