ஹைதராபாத்: மத்தியில் ஆட்சியில் உள்ள பாஜக அரசை பிரிட்டிஷ் ஆட்சியுடன் ஒப்பிட்டு தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி பேசியுள்ளார். காங்கிரஸ் கட்சி வேட்பாளரை ஆதரித்து வியாழக்கிழமை அன்று அவர் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். அப்போது அவர் தெரிவித்தது.
“இந்தியாவை கைப்பற்றுவதற்கு முன்பாக பிரிட்டிஷ் நாட்டவர்கள் சூரத் நகரில் தான் தொழில் தொடங்கினர். அதே பாணியில் சூரத்திலிருந்து தொடங்கி நாட்டை கைப்பற்றினர் பிரதமர் மோடியும், அமித் ஷாவும். அதன் மூலம் மக்கள் பணத்தை கொள்ளையடித்து உள்ளனர்.
பிரிட்டிஷ் ஆட்சியில் இடஒதுக்கீடு உட்பட எந்த நலனும் மக்களுக்கு இல்லை. அதே வழியில் பயணித்து நாட்டில் இடஒதுக்கீட்டை ஒழிக்க முற்படுகிறது பாஜக. மீண்டும் மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்தால் அது நடக்கும்” என அவர் தெரிவித்தார்.
மேலும், தெலங்கானா மாநில முன்னாள் முதல்வரும், பிஆர்எஸ் கட்சியின் தலைவருமான கே.சந்திரசேகர ரெட்டியை கடுமையாக விமர்சித்தார் ரேவந்த் ரெட்டி. “தொலைக்காட்சி சேனலில் நான்கு மணி நேரம் அவரால் அமர முடியும். ஆனால், சட்டப்பேரவையில் அவரால் அமர முடியாது. அவருக்கு காங்கிரஸ் கட்சியை எதிர்கொள்ள பயம்.
பழைய கதைகளை சொல்லி அனுதாபம் பெற முயற்சிக்கிறார். ஆனால், தெலங்கானா மக்கள் அவரை நம்ப மாட்டார்கள். வாக்குக்காக தற்போது பேருந்து யாத்திரை தொடங்கியுள்ளார். பத்து ஆண்டு காலம் தன்னை சந்திக்க வரும் மக்களை பார்க்காமல் கதவடைத்து வைத்திருந்தார்” என தெரிவித்தார்.