கார்த்தியின் ‘சர்தார் 2’ படப்பிடிப்பு விரைவில் தொடங்குகிறது என்றும், அடுத்த மாதம் படத்தின் பூஜை நடக்கிறது, ஜூனில் படப்பிடிப்பு இருக்கிறது என்றும் தகவல்கள் உலாவுகின்றன.
கடந்த 2022-ம் ஆண்டு, கார்த்தியின் நடிப்பில் பி.எஸ்.மித்ரனின் இயக்கிய படம் ‘சர்தார்’. தேசத்துரோகி என்று முத்திரை குத்தப்பட்ட உளவாளி, உண்மையில் தேசநலனுக்காக எத்தகைய தியாகங்களைச் செய்கிறார் என்பதே படத்தின் கதை. அதில் வாட்டர் கேன் பின்னணியில் நடக்கும் ஊழல்களையும் வெளிச்சத்திற்குக் கொண்டு வந்திருப்பார்கள். இந்தப் படத்தில் ‘சர்தார்’ என ரகசியப் பெயர் கொண்டவராக போஸ் என்ற கதாபாத்திரத்திலும், காவல்துறை அதிகாரி விஜய் பிரகாஷ் என்ற கதாபாத்திரத்திலும் இரட்டை வேடத்தில் ஸ்கோர் செய்திருப்பார் கார்த்தி. விறுவிறுப்பான இதன் திரைக்கதைக்காகவே இதன் இரண்டாம் பாகத்தை எதிர்பார்க்க ஆரம்பித்தனர் கார்த்தியின் ரசிகர்கள்.
கார்த்தி இப்போது ’96 பிரேம்குமாரின் இயக்கத்தில் ‘மெய்யழகன்’, நலன் குமாரசாமியின் இயக்கத்தில் ‘வா வாத்தியாரே’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இதில் ‘மெய்யழகன்’ படத்தில் அரவிந்த்சாமி, ஶ்ரீதிவ்யா, ராஜ்கிரண் எனப் பலரும் நடித்துள்ளனர். இதன் படப்பிடிப்பு கும்பகோணத்தில் தொடங்கி, அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நடந்துள்ளது. படப்பிடிப்பு முடிந்த வேகத்தில் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகளும் பரபரத்துக் கொண்டிருக்கின்றன. விரைவில் இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியாக உள்ளன.
இதனை அடுத்து கார்த்தி, நலன் குமாரசாமியின் இயக்கத்தில் ‘வா வாத்தியாரே’ என்ற படத்தில் நடிக்கிறார். இதில் சத்யராஜ், கீர்த்தி ஷெட்டி, ஆனந்த்ராஜ் எனப் பலரும் நடித்து வருகிறார்கள். சென்னையில் இதன் படப்பிடிப்பு போய்க்கொண்டிருக்கிறது. மும்முரமாக நடந்து வரும் இதன் படப்பிடிப்பு அடுத்த மாதம் நிறைவு பெறும் எனத் தெரிகிறது.
இந்தச் சூழலில்தான் ‘சர்தார் 2’ படப்பிடிப்பு அடுத்த மாதம் இருக்கும் என்ற தகவல் பரவி வருகிறது. இது குறித்து கோடம்பாக்கத்தில் விசாரிக்கையில் கிடைத்த தகவல்கள் இங்கே…
சில மாதங்களுக்கு முன்னரே பி.எஸ்.மித்ரன், கார்த்தியிடம் ‘சர்தார் 2’க்கான லைனைச் சொல்லிவிட்டார். அதில் இம்ப்ரஸ் ஆன கார்த்தி கதையையும் ரெடி பண்ணச் சொல்லிவிட்டார். கடந்த பிப்ரவரி மாதமே கதையும் ரெடியாகிவிட்டது. பவுண்டட் ஸ்கிரிப்ட் ரெடியான கையோடு, சத்தமே இல்லாமல் சென்னையில் உள்ள கோயில் ஒன்றில் எளிய முறையில் படப் பூஜையும் நடந்திருக்கிறது.
அதாவது கடந்த பிப்ரவரி மாதமே சென்னையில் உள்ள பார்த்தசாரதி கோவிலில் ‘சர்தார் 2’க்கான பூஜை நடந்து முடிந்துவிட்டது என்றும் அதன் வீடியோவை ஒருசில வாரங்களில் வெளியிடத் தீர்மானித்துள்ளனர் என்றும் சொல்கின்றனர். ஆக, ‘சர்தார் 2’க்காக முறையான அறிவிப்பு வெளிவரவிருக்கிறது. முதல் பாகத்தில் வில்லனாக பாலிவுட் நடிகர் சங்கி பாண்டே நடித்தது போல, இதிலும் பாலிவுட் நடிகர் ஒருவர் நடிக்க உள்ளார் என்றும் ஜூன் மாதத்தில் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் அதற்கான வேலைகள் ஒரு பக்கம் மும்முரமாகப் போய்க் கொண்டிருக்கின்றன என்றும் சொல்கிறார்கள்.