உலகின் பலகோடி மக்கள் ஆன்லைன் மெஸ்ஸேஜிங் தளமான வாட்ஸ்அப்பை (WhatsApp) பயன்படுத்திவருகின்றனர். குறிப்பாக, வாட்ஸ்அப்பில் எண்ட்-டு-எண்ட் என்கிரிப்ஷன் (end-to-end encryption) இருப்பதால், அதாவது வாட்ஸ்அப்பில் அனுப்புநரும் பெறுநரும் மட்டுமே தாங்கள் அனுப்பிய மெசேஜ்களை பார்க்க முடியும் என்பதால், தங்களின் பிரைவசிக்காக (Privacy) மக்கள் அதிகளவில் இதைப் பயன்படுத்திவருகின்றனர். வாட்ஸ்அப்பின் தாய் நிறுவனமான மெட்டாவின் (meta) தலைமை நிர்வாக அதிகாரி (CEO) மார்க் ஜுக்கர்பெர்க் (Mark Zuckerberg) கூட, `வாட்ஸ்அப் பயன்பாட்டில் இந்தியா முன்னணியில் இருக்கும் ஒரு நாடு… மக்களும், வணிகங்களும் செய்தியிடலை எவ்வாறு ஏற்றுக்கொண்டது என்பதன் அடிப்படையில் உலகை வழிநடத்துகிறது’ என்று கடந்த ஆண்டு நடைபெற்ற வருடாந்திர கூட்டத்தில் பேசியிருந்தார்.
இப்படியிருக்க, இந்தியாவில் தகவல் தொழில்நுட்ப (இடைநிலை வழிகாட்டுதல்கள் மற்றும் டிஜிட்டல் மீடியா நெறிமுறைகள் குறியீடு) விதிகள் 2021 ஆனது, வாட்ஸ்அப் போன்ற நிறுவனங்கள் தங்களின் பயனர்களின் உரையாடல்களைக் கவனிக்குமாறும், அவர்களை அடையாளம் காணுமாறும் கூறுகிறது. இந்த சட்டம் என்கிரிப்ஷனை பலவீனப்படுத்துவதாகவும், இந்திய அரசியலமைப்பின் கீழ் பயனர்களின் பிரைவஸி பாதுகாப்புகளை மீறுகிறது என்றும் நிறுவனங்கள் வாதிடுகின்றன. இந்த நிலையில், தகவல் தொழில்நுட்ப (இடைநிலை வழிகாட்டுதல்கள் மற்றும் டிஜிட்டல் மீடியா நெறிமுறைகள் குறியீடு) விதிகள் 2021-க்கு எதிராக வாட்ஸ்அப் நிறுவனம் தாக்கல்செய்த மனு டெல்லி உயர் நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, மெட்டா நிறுவனத்தின் வாட்ஸ்அப் சார்பில் ஆஜரான தேஜஸ் கரியா, “வாட்ஸ்அப் அளிக்கும் பிரைவசி அம்சத்துக்காக இந்தியாவில் 400 மில்லியன் மக்கள் இதனைப் பயன்படுத்திவருகின்றனர். ஆனால், தகவல் தொழில்நுட்ப (இடைநிலை வழிகாட்டுதல்கள் மற்றும் டிஜிட்டல் மீடியா நெறிமுறைகள் குறியீடு) விதிகள் 2021, என்கிரிப்ஷன் மற்றும் பயனர்களின் பிரைவசியை குறைமதிப்பிற்குட்படுத்துகிறது. இது இந்திய அரசியலமைப்பு பிரிவு 14, 19 மற்றும் 21-ன் கீழ் உத்தரவாதம் அளிக்கப்பட்ட பயனர்களின் அடிப்படை உரிமைகளை மீறுகிறது.
இதுபோன்ற விதி உலகில் வேறெங்கும் இல்லை. பிரேசிலில் கூட இல்லை. நாங்கள் ஒரு முழுமையான சங்கிலியை (Chain) வைத்திருக்க வேண்டும். மேலும், எந்த மெசேஜ்களை மறைகுறியாக்குமாறு (decrypted) கேட்கப்படும் என்பது எங்களுக்குத் தெரியாது. இதன் பொருள் மில்லியன் கணக்கான மெசேஜ்கள் பல ஆண்டுகளுக்கு சேமிக்கப்பட வேண்டும். எனவே, ஒரு ஆன்லைன் மெஸ்ஸேஜிங் தளமாக நாங்கள் இதைக் கூறுகிறோம்… என்கிரிப்ஷனை பிரேக் செய்யச் சொன்னால் இந்தியாவிலிருந்து வாட்ஸ்அப் வெளியேறும்” என்று கூறினார். இருப்பினும், மத்திய அரசின் சார்பில் ஆஜரான கீர்த்திமான் சிங், `இன்றைய சூழலில் அத்தகைய செயல்முறை அவசியம்’ என்று விதிகளை ஆதரித்துக் கூறினார். இறுதியில், இந்த வழக்கின் விசாரணையை ஆகஸ்ட் 14-ம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிமன்றம் அமர்வு, `பிரைவசி உரிமைகள் முழுமையானவை அல்ல. அவை எங்காவது சமநிலை செய்யப்பட வேண்டும்’ என்று கூறியது குறிப்பிடத்தக்கது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3OITqxs