கேரள மாநிலத்தின் 20 தொகுதிகளிலும் இரண்டாம் கட்டமாக இன்று வாக்குப்பதிவு நடந்தது. காலையில் வாக்குப்பதிவு தொடங்கியபோதே முக்கிய பிரமுகர்களும், வேட்பாளர்களும் வாக்குச்சாவடிக்குச் சென்று வரிசையில் நின்று வாக்களித்தனர். கண்ணூர் மாவட்டம் தலசேரி தாலுகாவில் பினராயி பகுதியில் உள்ள ஆர்.சி அமலா ஸ்கூலில் தனது வாக்கை பதிவு செய்தார் முதல்வர் பினராயி விஜயன். பின்னர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “கேரளாவில் 10 சீட் கிடைக்கும் என பிரதமர் சொல்கிறார். அதில் பூஜ்ஜியம் வேண்டுமானால் கிடைக்கும், பூஜ்ஜியத்துக்கு முன்னால் உள்ள அந்த ஒன்று கிடைக்காது. பா.ஜ.க-வுக்கும் சி.பி.எம் கட்சிக்கும் இடையே சில தொகுதிகளில் ரகசிய உடன்பாடு ஏற்பட்டு இருப்பதாக காங்கிரஸ் எதிர்கட்சி தலைவர் வி.டி.சதீசன் கூறியுள்ளதாக சொல்கிறீர்கள். ஆர்.எஸ்.எஸ் இரண்டாவது தலைவர் கோல்வாக்கரின் முன்னிலையில் முட்டி மடித்து வணங்கும் ஒருவரால் தான் அப்படி ரகசிய உடன்பாடு ஏற்படுத்த முடியும். யாருடைய முன்னிலையிலும் தாழ்ந்து போகவோ, வணங்க வேண்டிய அவசியமோ எங்களுக்கு இல்லை.

எல்லா காலத்திலும் வகுப்புவாத கட்சிகளுக்கு எதிராக உறுதியான நிலைப்பாடு கொண்டது சி.பி.எம் கட்சியாகும். ஆர்.எஸ்.எஸ் வன்முறைக்கு இரையாகி ரத்த சாட்சிகளாக மாறியவர்கள் எங்கள் சகாக்கள். ரகசிய ஒப்பந்தம் ஏற்படுத்துவது காங்கிரஸ் கட்சியின் பாணி ஆகும். இந்த தேர்தல் என்பது நாட்டின் ஒட்டுமொத்த நடவடிக்கைகளை பிரதானமாக கொண்டதாகும். நம் நாட்டில் தேர்தல் வரும்போது தவறான தகவல்களை பெற அவிழ்த்து விடுவார்கள். அதன் ஒரு பகுதியாகத்தான் சி.பி.எம் மத்தியகுழு உறுப்பினரும், இடது ஜனநாயக கூட்டணி ஒருங்கிணைப்பாளருமான இ.பி.ஜெயராஜன் பா.ஜ.க-வுக்கு செல்ல பேச்சுவார்த்தை நடத்தியதாக தவறான தகவல்களை சொல்கிறார்கள். இ.பி.ஜெயராஜனின் அரசியல் வாழ்க்கையும், அவரது செயல்பாடுகளும் கம்யூனிஸ்ட் கட்சியினருக்கு உத்வேகத்தை கொடுப்பதாகும். அவர் மீது எந்த களங்கமும் இல்லை என்பதை மக்கள் புரிந்து கொள்வார்கள்.

இ.பி.ஜெயராஜன் அனைவரிடமும் மிகவும் நட்பாக பழகக் கூடியவர். நட்பு வைப்பதில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். தினமும் காலையில் தூக்கத்திலிருந்து எழும்பும் போது யாரை வஞ்சிக்கலாம் என நினைக்கும் ஆட்கள் உண்டு. அப்படிப்பட்டவர்களுடன் நட்பு வைக்கக்கூடாது. இ.பி.ஜெயராஜன் கேரளா மாநில பா.ஜ.க பிரபாரி-யான பிரகாஷ் ஜவடேகரை சந்தித்ததாக கூறுகிறார்கள். நானும் பிரகாஷ் ஜவடேகரை பல முறை சந்தித்திருக்கிறேன். சாதாரணமாக ஒரு அரசியல் தலைவரான பிரகாஷ் ஜாவடேகர் என்னை பார்க்க வரும்போது அவரை நான் பார்ப்பதில் என்ன தவறு இருக்கிறது” என்றார்.