புதுடெல்லி,
தலைநகர் டெல்லியில் உள்ள நாடாளுமன்ற வளாகத்தில் இன்று பாதுகாப்பு ஒத்திகை நிகழ்த்தப்பட்டது. இதன் ஒரு பகுதியாக என்.எஸ்.ஜி. கமாண்டோ படையினர் ஹெலிகாப்டர் மூலம் நாடாளுமன்ற வளாகத்திற்குள் குதித்தனர். இதன்படி பயங்கரவாத தாக்குதல் அல்லது அவசர காலத்தில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஒத்திகை மேற்கொள்ளப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
நாடாளுமன்ற வளாகத்தில் குறிப்பிட்ட கால இடைவெளியில் இதுபோன்ற பாதுகாப்பு ஒத்திகைகள் நிகழ்த்தப்பட்டு வருகின்றன. அண்மையில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நாடாளுமன்றத்தில் நடைபெற்ற குளிர்கால கூட்டத்தொடரின்போது பாதுகாப்பு குளறுபடி ஏற்பட்டதைத் தொடர்ந்து நாடாளுமன்ற வளாகத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.
நாடாளுமன்ற மக்களவை தேர்தலைத் தொடர்ந்து புதிய அரசு அமைந்த பிறகு நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற உள்ளதால், அதற்கு முன்பாக பாதுகாப்பு ஒத்திகை நிகழ்த்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.