“நெருக்கடி கொடுத்தால் இந்தியாவை விட்டு வெளியேறுவோம்” – வாட்ஸ்அப் வாதம் @ டெல்லி ஐகோர்ட்

புதுடெல்லி: “எண்ட்-டு-எண்ட் என்கிரிப்ஷன் (end-to-end encryption)ஐ உடைக்க மத்திய அரசு எங்களை கட்டாயப் படுத்தினால் இந்தியாவை விட்டு வெளியேற நேரிடும்” என்று டெல்லி உயர்நீதிமன்றத்தில் வாட்ஸ்அப் நிறுவனம் தெரிவித்துள்ளது.

மத்திய அரசால் கடந்த 2021ம் ஆண்டு ‘தகவல் தொழில்நுட்பம் (இடைநிலை வழிகாட்டுதல்கள் மற்றும் டிஜிட்டல் மீடியா நெறிமுறைகள் சட்டம்) விதிகள்-2021’ கொண்டுவரப்பட்டது. வாட்ஸ்அப், பேஸ்புக் போன்ற சமூக வலைதள நிறுவனங்கள் அவர்களின் பயனர்களின் உரையாடல்களைக் கவனிக்குமாறும், அவர்களை அடையாளம் காண வேண்டும் என்று கூறுவதாக அதற்கு எதிர்ப்பு தெரிவித்து மெட்டா நிறுவனம் சார்பில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கு விசாரணை டெல்லி உயர் நீதிமன்றத்தில் நேற்று நடந்தது. அப்போது, வாட்ஸ்அப் நிறுவனம் சார்பில் வாதிட்ட வழக்கறிஞர் தேஜஸ் கரியா என்பவர், “வாட்ஸ்அப்பின் பிரைவசி அம்சத்துக்காக தான் இந்தியாவில் 400 மில்லியன் மக்கள் இதனைப் பயன்படுத்துகின்றனர்.

வாட்ஸ்அப்பில் எண்ட்-டு-எண்ட் என்கிரிப்ஷன் (end-to-end encryption) இருப்பதால், அதாவது வாட்ஸ்அப்பில் மெசேஜ் அனுப்பியவரும், அதை பெறுபவரும் மட்டுமே தாங்கள் அனுப்பிய மெசேஜ்களை பார்க்க முடியும் என்று அம்சத்தால், தங்களின் தனியுரிமைக்காக (Privacy) மக்கள் அதிகளவில் இதைப் பயன்படுத்திவருகின்றனர்.

ஆனால் மத்திய அரசு கொண்டுவந்துள்ள தகவல் தொழில்நுட்ப (இடைநிலை வழிகாட்டுதல்கள் மற்றும் டிஜிட்டல் மீடியா நெறிமுறைகள் குறியீடு) விதிகள் 2021 ஆனது, பயனர்களின் தனியுரிமையை குறைத்து மதிப்பிடுகிறது. மத்திய அரசு கொண்டுவந்துள்ள இந்த சட்டம், இந்திய அரசியலமைப்பு சட்டம் பிரிவு 14, 19 மற்றும் 21, மக்களுக்கு உத்தரவாதம் அளித்துள்ள மக்களின் அடிப்படை உரிமைகளை மீறுகிறது.

இதுபோன்ற விதி மற்ற நாடுகள் எதிலும் இல்லை. ஏன், பிரேசிலில் கூட இல்லை. எந்த மெசேஜ்களை டிகிரிப்ட் (decrypted) செய்யச்சொல்லி கேட்கப்படும் என்பது எங்களுக்குத் தெரியாது. எனவே, எண்ட்-டு-எண்ட் என்கிரிப்ஷன்-ஐ உடைக்க மத்திய அரசு எங்களை கட்டாயப்படுத்தினால் இந்தியாவை விட்டு வெளியேற நேரிடும்” என்று கூறினார்.

மத்திய அரசு வழக்கறிஞரோ, “இன்றைய காலகட்டத்துக்கு இத்தகைய செயல்முறையும் சட்டமும் அவசியம்” என்று அரசு கொண்டுவந்துள்ள விதிகளை ஆதரித்து வாதிட்டார். இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள், வழக்கின் விசாரணையை ஆகஸ்ட் 14-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.