சென்னை: தமிழகம் முழுவதும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள மையங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள், வாக்கு எண்ணிக்கை முன்னேற்பாடுகள் குறித்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு, காணொலியில் ஆலோசனை நடத்தினார்.
தமிழகத்தில் மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு கடந்த 19-ம் தேதி ஒரே கட்டமாக நடந்து முடிந்தது. இதைத் தொடர்ந்து, அன்றைய தினமே 39 மக்களவை தொகுதிகள் மற்றும் விளவங்கோடு சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் அடங்கிய மின்னணு இயந்திரங்கள் அனைத்தும் அந்தந்த தொகுதிகளில் உள்ள வாக்கு எண்ணிக்கை மையங்களில் உள்ள பாதுகாப்பு அறையில் (ஸ்ட்ராங் ரூம்) பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. அந்த மையங்களில் துணை ராணுவ படையினர், தமிழக ஆயுதப்படை போலீஸார், உள்ளூர் போலீஸார் என 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கண்காணிப்பு கேமராக்கள் மூலம் 24 மணிநேரமும் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றன. இதுதவிர அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளும் 3 ஷிப்ட்களாக கண்காணித்து வருகின்றனர்.
நாடு முழுவதும் வாக்குப்பதிவு முடிந்த பிறகு, ஜூன் 4-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இந்நிலையில், வாக்குஎண்ணும் மையங்களில், வாக்கு எண்ணிக்கைக்கான முன்னேற்பாடுகள், மின்னணு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் உள்ளிட்டவை தொடர்பாக அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு நேற்று காணொலியில் ஆலோசனை நடத்தினார். கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரி சங்கர்லால் குமாவத், இணை தலைமை தேர்தல் அதிகாரி காந்த் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அப்போது, தீவிர கண்காணிப்பை மேற்கொள்ளுமாறும், வாக்கு எண்ணிக்கைக்கான அறைகளை விரைவாக தயார்படுத்துமாறும் அதிகாரிகளை சத்யபிரத சாஹு அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது.