CSK vs SRH Match Update: இந்தியன் பிரீமியர் லீக் (Indian Premier League) எனப்படும் ஐபிஎல் தொடரின் 17வது சீசன் (IPL 2024) தற்போது நடைபெற்று வருகிறது. ஐபிஎல் போட்டி என்றாலே விறுவிறுப்புக்கும், பரபரப்புக்கும், எதிர்பாரா நிகழ்வுகளுக்கும் பெயர் பெற்றது. அது இந்த சீசனிலும் தொடர்கிறது எனலாம். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி (Chennai Super Kings) வழக்கம்போல் சிறப்பாக தொடங்கினாலும் இப்போது சற்று திணறி வருகிறது.
மும்பை அணி வழக்கம்போல் சொதப்பலாக தொடங்கினாலும், இந்த முறை பல போட்டிகளில் தோல்வியை சந்தித்து வருகிறது. அந்த அணி எப்போது எழுச்சி பெற்று பிளே ஆப் நோக்கி பாயும் என பலரும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இப்படி ஒவ்வொரு அணியும் ஒவ்வொரு போட்டியிலும் விதவிதமாக தங்களின் ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றன.
ஆர்சிபி வெறித்தனமான வெற்றி
குறிப்பாக, நேற்றைய ஹைதராபாத் – பெங்களூரு (SRH vs RCB) போட்டியில் யாருமே எதிர்பார்க்காத வகையில், ஆர்சிபி பந்துவீச்சாளர்கள் தங்களின் வியூகத்தை சிறப்பாக செயல்படுத்தி பவர்பிளேவிலேயே 4 விக்கெட்டுகளை தூக்கி அசத்தினர். ஆடுகளம் பேட்டிங்கிற்கு சாதகமாக இருந்தாலும், வழக்கத்தை விட மெதுவாக பந்துவீசும்போது பந்துவீச்சாளர்களுக்கு ஆடுகளம் சாதகமாக இருந்ததை பயன்படுத்தி ஆர்சிபி வெற்றியை அறுவடை செய்தது.
ஆர்சிபி அணி தனது 2வது வெற்றியை பெற்றது என்பதை விட பலராலும் வீழ்த்த முடியாத அணியாக அசுர பலம் கொண்ட அணியாக பேசப்பட்ட சன்ரைசரஸ் ஹைதராபாத் (Sunrisers Hyderabad) அணியின் பேட்டர்களை அடக்கி ஆர்சிபி வெற்றியை ருசித்திருக்கிறது. ஆர்சிபியின் இந்த வெற்றி இனி ஹைதராபாத் அணியை எதிர்கொள்ள காத்திருக்கும் அணிக்கு பெரும் ஊக்கத்தை அளித்திருக்கும். ஹைதராபாத் அணியை அடுத்து சிஎஸ்கே அணி தனது கோட்டையான சேப்பாக்கத்தில் எதிர்கொள்ள உள்ளது.
மீண்டும் தகர்க்கப்படுமா சேப்பாக்கம்…?
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கோட்டை என கூறப்பட்டு வந்தாலும், லக்னோ அணி கடந்த போட்டியில் அந்த கோட்டையை தகர்த்துவிட்டது என்றுதான் கூற வேண்டும். பந்துவீச்சில் லக்னோ அணி சொதப்பினாலும் பேட்டிங்கில் ஸ்டாய்னிஸ், பூரன் ஆகியோர் அதிரடி அந்த அணிக்கு வெற்றியை பெற்று தந்தது. டாஸை வென்ற சாதகம் ஒருபுறம் என்றால், வலுவில்லாத பந்துவீச்சை எப்படி பொறுமையாக தாக்க வேண்டும் என்பதையும் லக்னோ அணி மற்ற அணிகளுக்கு கற்று தந்தது.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி இந்த போட்டியில் தோற்றாலும் அடுத்த போட்டியில் வெறிக்கொண்டு களமிறங்கும். எனவே, சென்னை அணி அவ்வளவு எளிதில் எஸ்ஆர்ஹெச் அணியை (CSK vs SRH) சேப்பாக்கத்தில் வீழ்த்தி விட இயலாது. இந்த தொடர் முழுவதும் சேப்பாக்கத்தில் ஆடுகளம் என்பது பேட்டிங் பிட்ச்சாகவே இருந்து வருகிறது. அதுவும் இரண்டாம் பாதியில் பனியின் தாக்கம் அதிகம் இருக்கிறது என்பதால் சுழற்பந்துவீச்சையும் சிஎஸ்கேவால் அதிகம் பயன்படுத்த முடியவில்லை.
ஆடுகளத்தில் மாற்றமா?
அந்த வகையில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் சேப்பாக்கம் மைதானத்தின் ஆடுகளம் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு ஆகிய இரண்டுக்கும் சாதகம் அளிக்கும் வகையில் வடிவமைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. சேப்பாக்கத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் பந்துவீச்சை விட சிஎஸ்கேவிடம் சிறப்பான பந்துவீச்சு உள்ளது என்பதால் பேட்டிங் மற்றும் பந்துவீச்சுக்கு சாதகமான பிட்சை அமைக்கும்பட்சத்தில் அது சிஎஸ்கேவுக்கு சாதகமாக மாறலாம். வழக்கம்போல், ஆடுகளம் அமைந்தால் அது சன்ரைசர்ஸ் அணிக்கே சாதகமாக இருக்கும்.