புதுடெல்லி: மக்களவைத் தேர்தல் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நாடு முழுவதும் 12 மாநிலங்கள் மற்றும் 1 யூனியன் பிரதேசத்தில் உள்ள 88 தொகுதிகளில் இன்று (ஏப்.26) நடைபெற்றுவரும் சூழலில், மதியம் 1 மணி நிலவரப்படி அவற்றில் மொத்தமாக 39.13 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன. அதிகபட்சமாக திரிபுரா மாநிலத்தில் 54.47 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன. மகாராஷ்டிராவில் குறைந்தபட்சமாக 31.77 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன. அதன் விவரம்:
மாநிலங்கள் | வாக்குகள் |
அசாம் | 46.31% |
பிஹார் | 33.80% |
சத்தீஸ்கர் | 53.09% |
ஜம்மு காஷ்மீர் | 42.88% |
கர்நாடகா | 38.23% |
கேரளா | 39.26% |
மத்தியப் பிரதேசம் | 38.96% |
மகாராஷ்டிரா | 31.77% |
மணிப்பூர் | 54.26% |
ராஜஸ்தான் | 40.39% |
திரிபுரா | 54.47% |
உத்தரப் பிரதேசம் | 35.73% |
மேற்கு வங்கம் | 47.29% |
மொத்தம் (1 மணி) |
39.13% |
கேரளா – 20 , கர்நாடகா- 14, ராஜஸ்தான் – 13, மகாராஷ்டிரா, உத்தர பிரதேசம் – தலா 8, மத்திய பிரதேசம் – 6,பிஹார், அசாம் – தலா 5, மேற்குவங்கம், சத்தீஸ்கர் – தலா 3, ஜம்மு-காஷ்மீர், திரிபுரா, மணிப்பூரில் தலா ஒரு தொகுதி என ஒட்டுமொத்தமாக 12 மாநிலங்கள், ஒரு யூனியன் பிரதேசத்தை சேர்ந்த 88 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இந்தத் தேர்தல் களத்தில் 1202 வேட்பாளர்கள் உள்ளனர். இவர்களில் 1098 பேர் ஆண்கள், 102 பேர் பெண்கள், இருவர் மாற்று பாலினத்தவர். இத்தேர்தலில் வாக்களிக்க தகுதி பெற்றவர்களில் 3.28 கோடி பேர் 20 முதல் 29 வயது வரையிலான இளம் வாக்காளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், மதியம் 1 மணி நிலவரப்படி, அதிகபட்சமாக திரிபுரா மாநிலத்தில் 54.47 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன. மகாராஷ்டிராவில் குறைந்தபட்சமாக 31.77 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன.
வன்முறை ஏதும் பதிவாகவில்லை: கடந்த ஏப்ரல் 19-ஆம் தேதி நடந்த மக்களவைத் தேர்தல் முதல்கட்ட வாக்குப்பதிவின்போது மணிப்பூரில் துப்பாக்கிச் சூடு நடைபெற்றது. மேற்கு வங்கத்தில் மூன்று தொகுதிகளிலும் சிறிய அளவில் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்கும், பாஜகவினருக்கும் இடையே சிறு சிறு மோதல்கள் நடந்தன. ஆனால் இன்றைய தேர்தலைப் பொறுத்தவரை, இதுவரை எவ்வித அசம்பாவிதமும் இன்றி அமைதியாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
குமாரசாமி குற்றச்சாட்டு: வன்முறை இல்லாதபோதும் குற்றச்சாட்டுகளுக்கு குறைவில்லை. கர்நாடகாவில் வாக்களித்துவிட்டு செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் முதல்வரும் மதச்சார்பற்ற ஜனதா தள கட்சியின் தலைவருமான ஹெச்டி குமாரசாமி, காங்கிரஸ் கட்சி வாக்காளர்களுக்கு பரிசுப் பொருட்களை அறிவித்து அதனைப் பெற்றுக் கொள்ள க்யூஆர் கோடுடன் கூடிய கூப்பன்களை வழங்கியுள்ளதாகக் குற்றஞ்சாட்டினார்.
மேற் குவங்கத்தில் இன்று 3 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடந்து கொண்டிருக்க, அடுத்தக்கட்ட தேர்தலுக்காக கட்டால் தொகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள மம்தா பானர்ஜி, மேற்கு வங்க மாநிலத்தில் சமூ கநலத் திட்டங்களை செயல்படுத்த இயலாத அளவுக்கு மத்திய அரசு மாநிலத்துக்கான நிதியை முடக்கிவைத்திருப்பதாகக் குற்றஞ்சாட்டினார்.