கவுகாத்தி: அமேதி, ரேபரேலி தொகுதிக்கான வேட்பாளர்களை தெரிந்துகொள்வதற்கு இன்னும் சில நாட்கள் காத்திருங்கள் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே தெரிவித்துள்ளார்.
அசாம் மாநிலம் கவுகாத்தியில் செய்தியாளர்களைச் சந்தித்த காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கேவிடம் உத்தரப் பிரதேசத்தின் அமேதி மற்றும் ரேபரேலி தொகுதிகளில் காங்கிரஸ் சார்பில் யார் போட்டியிடுவார்கள் என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த கார்கே, “இன்னும் சில நாட்கள் காத்திருங்கள். அனைத்துக்கும் பதில் கிடைக்கும். வயநாட்டில் உள்ள மக்கள், ராகுல் காந்தியை விரும்புகிறார்கள். அதனால்தான் அவர் அங்கு போட்டியிடுகிறார்” எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய கார்கே, “பிரதமர் மோடி தனது தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றைக் கூட நிறைவேற்றவில்லை. ஆனால், நாட்டுக்காக நிறைய செய்துள்ளதாக பேசுகிறார். காங்கிரஸ் இந்தியாவை சுதந்திரமாக்கியவர்களின் கட்சி. பாஜக, இந்தியாவின் சுதந்திரத்துக்காகவோ, இந்தியாவின் வளர்ச்சிக்காகவோ ஒருபோதும் போராடவில்லை. நாங்களே இந்த தேசத்தை கட்டியெழுப்பினோம்.
மோடிதான் எல்லாம் என்று தேசபக்தி பற்றி பாஜகவினர் அதிகம் பேசுகிறார்கள். மேலும், நேரு முன்னாள் பிரதமர்கள் நேருவோ, இந்திரா காந்தியோ, லால் பகதூர் சாஸ்திரியோ அவர்கள் முன் ஒன்றுமில்லை என்பது போல் பேசுகிறார்கள். 2014-க்குப் பிறகுதான் இந்தியா சுதந்திரம் அடைந்தது. அதற்கு முன் நாடு சுதந்திரம் அடையவில்லை என்ற எண்ண வைக்கும் அளவுக்கு பேசுகிறார்கள்.
இதில் வருத்தம் என்னவென்றால், காங்கிரஸ் கட்சியில் இருந்து வளர்ந்து, தலைவர்களாக மாறியவர்களும் இதையே சொல்கிறார்கள் என்பதுதான். காங்கிரஸ் கட்சியில் இருந்து சென்றவர்களும் இந்திரா காந்தி, சோனியா காந்தி, ராகுல் காந்தியை விமர்சிக்கிறார்கள். காங்கிரஸ் மிகவும் மோசம் என்றால், அவர்கள் ஏன் தங்கள் வாழ்நாளில் 30-40 வருடங்களை தேவையில்லாமல் செலவழித்தார்கள் என்று கேளுங்கள். இவர்களுக்கு எல்லாம் நாட்டில் என்ன நடந்தது என்பது தெரியவில்லை” என்று கார்கே கூறினார்.