மகாராஷ்டிராவில் காங்கிரஸ் கட்சி 17 மக்களவைத் தொகுதியில் போட்டியிடுகிறது. காங்கிரஸ் கூட்டணியில் சிவசேனா(உத்தவ்) மற்றும் தேசியவாத காங்கிரஸ்(சரத்பவார்) கட்சிகள் இடம் பெற்றுள்ளன. இந்த இரண்டு கட்சிகளும் மகாராஷ்டிராவில் மக்களவைத் தேர்தலில் போட்டியிட இஸ்லாமியர்கள் யாருக்கும் வாய்ப்பு கொடுக்கவில்லை. காங்கிரஸ் கட்சியும் 16 தொகுதிக்கு வேட்பாளர்களை அறிவித்து விட்டது. அதில் ஒருவர் கூட இஸ்லாமியர் கிடையாது. வடமத்திய மும்பை தொகுதியில் கணிசமாக இஸ்லாமிய வாக்காளர்கள் இருக்கின்றனர். எனவே இத்தொகுதியில் காங்கிரஸ் கட்சி இஸ்லாமிய வேட்பாளர் ஒருவரை நிறுத்தும் என்று அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால் கடந்த சில நாட்களுக்கு முன்பு இத்தொகுதிக்கு மும்பை காங்கிரஸ் தலைவர் வர்ஷா கெய்க்வாட் என்பவரை கட்சி தலைமை வேட்பாளராக அறிவித்தது.
இது முஸ்லிம் வாக்காளர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது. ஏற்கனவே மும்பை காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பாபா சித்திக் அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியில் சேர்ந்துவிட்டார். இப்போது மற்றொரு முன்னாள் அமைச்சரான நசீம் கானும் காங்கிரஸ் தலைமை மீது அதிருப்தியடைந்து கட்சி தலைவர் மல்லிகார்ஜுன் கார்கேக்கு கடிதம் எழுதி இருக்கிறார்.
அக்கடிதத்தில், ”மகாராஷ்டிராவில் உள்ள 48 தொகுதியில் காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் ஒரு இஸ்லாமிய பிரமுகருக்கு கூட போட்டியிட வாய்ப்பு கொடுக்கவில்லை. மாநிலம் முழுவதும் உள்ள சிறுபான்மையினர் மற்றும் சிறுபான்மை தலைவர்கள் சிறுபான்மை சமுதாயத்தை சேர்ந்த ஒருவருக்காவது காங்கிரஸ் வாய்ப்பு கொடுக்கும் என்று எதிர்பார்த்தனர். ஆனால் துரதிஷ்டவசமாக யாருக்கும் வாய்ப்பு கொடுக்கவில்லை. இப்போது காங்கிரஸ் தொண்டர்களும், தலைவர்களும் என்னிடம் இஸ்லாமியர்கள் வாக்குகள் வேண்டும் ஆனால் தேர்தலில் போட்டியிட ஏன் வாய்ப்பு கொடுக்கப்படவில்லை என்று கேட்கின்றனர். இதனால் அவர்களை நேரில் பார்க்க முடியாத நிலையில் இருக்கிறேன். இஸ்லாமியர்களுக்கு சொல்ல என்னிடம் பதில் இல்லை. எனவே மகாராஷ்டிரா காங்கிரஸ் தேர்தல் பிரசார கமிட்டியில் இருந்து ராஜினாமா செய்கிறேன்”என்று குறிப்பிட்டுள்ளார்.
நசீம் கான் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், ”காங்கிரஸ் அனைவருக்கும் பிரதிநிதித்துவம் கொடுக்கும் தனது நீண்ட கால கொள்கையில் இருந்து விலகி செல்கிறது. சிறுபான்மைத் தலைவர்கள் எனக்கு போன் செய்து வேட்பாளர் தேர்வில் காங்கிரஸ் ஏன் இஸ்லாமியர்களை புறக்கணிக்கிறது என்று கேட்கின்றனர். அவர்களது கேள்வியை என்னால் எதிர்கொள்ள முடியவில்லை”என்றார். ஏற்கனவே மிலிந்த் தியோரா மற்றும் பாபா சித்திக் ஆகியோர் மும்பை காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி இருக்கின்றனர். இப்போது நசீம் கானும் கட்சியில் இருந்து வெளியேறுவார் என்று தெரிகிறது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3OITqxs