புதுடெல்லி: உத்தராகண்ட் மாநிலம் நைனிடால் மலைப் பகுதியில் காட்டுத் தீ பற்றி எரிந்து வருகிறது. அதனை கட்டுப்படுத்த, இந்திய விமானப்படை மற்றும் இந்திய ராணுவத்தை அம்மாநில அரசு நாடியுள்ளது. மேலும் காட்டுத் தீ விபத்து குறித்து ஆலோசனை நடத்த உள்ளதாக அம்மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி தெரிவித்துள்ளார்.
உத்தராகண்ட் மாநிலம், ஹல்த்வானி மாவட்டத்தில் நைனிடால் மலைப் பகுதியில் வெப்பம் அதிகரித்துள்ளதால், காட்டுத் தீ பற்றி எரிந்து வருகிறது. நைனிடால் வனத்துறையினர், 36 மணி நேரத்துக்கும் மேலாக எரிந்து கொண்டிருக்கும் காட்டுத் தீயைக் அணைக்க போராடி வரும் நிலையில், உதவிக்காக இந்திய விமானப்படை மற்றும் இந்திய ராணுவத்தை அழைத்துள்ளனர்.
இந்த காட்டுத் தீ நேற்று இரவு நைனிடால் நகரை அடைந்தது. ஏற்கெனவே, காட்டுத் தீயை கட்டுப்படுத்தும் பணியில் மாவட்ட நிர்வாகம், தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். எனினும் காட்டுத் தீ நகர்ப்பகுதியை அடைந்துவிட்டதால், மலை நகரம் முழுவதும் புகை மூட்டமாக உள்ளது.
ஹெலிகாப்டர் மூலம், ஏரியிலிருந்து நீர் எடுத்துச் செல்லப்பட்டு, காட்டுத் தீ எரிந்து வரும் பகுதியில் ஊற்றி தீயை அணைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. இதற்கிடையே நைனிடால் ஏரியில் படகு சவாரிக்கு அதிகாரிகள் தடை விதித்துள்ளனர். நைனிடாலில் உள்ள உயர் நீதிமன்ற வளாகத்தை ஒட்டிய பகுதியில் தீ பரவியுள்ளது.
உத்தராகண்ட் முதல்வர் புஸ்கர் சிங் தாமி இது குறித்து, இந்தக் காட்டுத் தீ எங்களுக்கு சவாலாக உள்ளது. இது பெரிய அளவில் இருப்பதால், ராணுவத்திடம் உதவி கேட்டுள்ளோம். நான் இன்று ஹல்த்வானியில் ஒரு கூட்டத்தை நடத்த உள்ளேன். இது தொடர்பாக டேராடூனிலும் ஒரு கூட்டத்தை நடத்தியுள்ளோம். விரைவில் தீயைக் கட்டுப்படுத்த முயற்சிப்போம்” என்றார்.
காட்டுத் தீ குறித்து உயர் நீதிமன்ற உதவிப் பதிவாளர் அனில் ஜோஷி கூறுகையில், “தி பைன்ஸ் அருகே அமைந்துள்ள பழைய காலியான வீடு ஒன்றில் தீ பரவியுள்ளது. இது உயர் நீதிமன்ற காலனிக்கு எந்த சேதத்தையும் ஏற்படுத்தவில்லை. எனினும், இங்குள்ள கட்டிடங்களுக்கு அருகில் தீப்பற்றி எரிந்து வருவதால் ஆபத்தான நிலை உள்ளது” என்றார்.
கடந்த 24 மணி நேரத்தில் உத்தரகாண்ட் மாநிலம் குமாவோன் பகுதியில் 26 காட்டுத் தீ சம்பவங்கள் பதிவாகியுள்ளன. குறிப்பாக கர்வாலில் ஐந்து சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இந்த காலகட்டத்தில் மொத்தம் 33.34 ஹெக்டேர் வனப்பகுதி பாதிக்கப்பட்டுள்ளது. காட்டுத் தீ சம்பவம் அம்மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கிடையே ருத்ரபிரயாக்கில் காடுகளுக்கு தீ வைக்க முயன்ற 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்தப் பகுதியின் வனத்துறை அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.