பத்தாண்டு காலம் இந்தியாவை ஆட்சிசெய்த பிரதமர் மோடி, தனது ஆட்சியின் சாதனைகளைச் சொல்லி வாக்கு கேட்க முடியாமல், மதரீதியிலான வெறுப்புப்பேச்சின் மூலமாகவே ஜெயிக்க முடியும் என்ற முடிவுக்கு வந்துவிட்டதாக சாடுகிறார்கள் எதிர்க்கட்சினர்.
ஆகவேதான், முழுக்க முழுக்க இஸ்லாமிய வெறுப்பு கருத்துக்கள் நிறைந்த தேர்தல் பிரசாரத்தை பிரதமர் மோடி தொடர்ச்சியாக மேற்கொண்டுவருகிறார்.
கர்நாடகாவில் மொத்தம் 28 மக்களவைத் தொகுதிகள் இருக்கின்றன. அவற்றில், 2019 மக்களவைத் தேர்தலில், 25 தொகுதிகளில் பா.ஜ.க வெற்றிபெற்றது. ஒரு தொகுதியில் காங்கிரஸும், ஒரு தொகுதியில் மதச்சார்பற்ற ஜனதா தளமும், மற்றொரு தொகுதியில் சுயேச்சை வேட்பாளர் சுமலதாவும் வெற்றிபெற்றனர்.
ஆனால், இந்த முறை கர்நாடகாவில் களநிலவரம் மாறியிருக்கிறது என்கிறார்கள். ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரைக்குப் பிறகு, கர்நாடகாவில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றிபெற்று ஆட்சியதிகாரத்தில் இருக்கிறது. முதல்வராக சித்தராமையாவும், துணை முதல்வராக டி.கே.சிவக்குமாரும் இருக்கும் நிலையில், கர்நாடகாவில் மிகப்பெரிய வெற்றியைப் பெற வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி முனைப்புடன் வேலைசெய்துவருகிறது.
பா.ஜ.க 370 தொகுதிகளிலும், தேசிய ஜனநாயகக் கூட்டணி 400 தொகுதிகளில் ஜெயிக்கும் என்று பிரதமர் மோடி சொல்லிவிட்டார். அதன் பிறகு, மிகக் குறைந்த இடங்களை மட்டுமே பிடிக்கும் நிலை ஏற்பட்டால், அது பா.ஜ.க-வுக்கு பெரும் கௌரவக் குறைச்சலாகிவிடும் என்பதுடன், அதிகாரத்தைக் கைப்பற்றுவதும் கேள்விக்குறியாகிவிடும். இந்த நிலையில்தான், பிரதமரின் பரப்புரையில் மாற்றம் நிகழ்ந்தது. அதையொட்டித்தான், முஸ்லிம்களைக் குறிவைத்து வெறுப்புப் பிரசாரத்தில் மோடி ஈடுபட்டிருப்பதாக விமர்சனம் எழுந்திருக்கிறது.
அந்த வகையில்தான், கர்நாடகாவிலும் மதரீதியான பிரசாரத்தை பிரதமர் மோடி முன்னெடுத்திருக்கிறார். இந்தியாவில் கல்வி, சமூகம், பொருளாதாரம் ஆகியவற்றில் பெரும்பாலான முஸ்லிம்கள் பின்தங்கியிருக்கும் நிலையில், முஸ்லிம்களின் முன்னேற்றத்துக்கு அரசு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் என்று நீதிபதி சச்சார் தலைமையிலான குழு ஏராளமான பரிந்துரைகளை வழங்கியிருக்கிறது. மேலும், முஸ்லிம்களுக்கு 10 சதவிகித இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற நீதிபதி ரங்கநாத் தலைமையிலான ஆணையத்தின் பரிந்துரையும் கிடப்பில் போடப்பட்டிருக்கிறது.
இந்த பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கு கடந்த பத்தாண்டு காலத்தில் எந்த நடவடிக்கையும் பிரதமர் மோடி எடுக்கவில்லை. ஆனால், கர்நாடகாவில் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்கப்பட்டிருப்பதை தற்போது அவர் சர்ச்சையாக்குகிறார். தமிழ்நாடு, கர்நாடகா உள்ளிட்ட சில மாநிலங்களில் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்கப்பட்டிருக்கிறது. மத அடிப்படையில் அல்லாமல், ஓ.பி.சி-க்கான இடஒதுக்கீட்டிலிருந்து அது தரப்பட்டிருக்கிறது.
இதைத்தான், ‘கொல்லைப்புற வாசல் வழியாக’ முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்கப்பட்டிருக்கிறது என்று கர்நாடகாவில் தேர்தல் பரப்புரையின்போது மோடி பேசியிருக்கிறார். “ஒட்டுமொத்த ஓ.பி.சி-க்களின் இடஒதுக்கீட்டிலிருந்து, ஓ.பி.சி-க்கு இணையாக முஸ்லிம்களுக்கு காங்கிரஸ் இடஒதுக்கீடு அளித்திருக்கிறது. மத அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்கக்கூடாது என்ற நிலைப்பாட்டை பாபாசாகேப் அம்பேத்கர் எடுத்தார். ஆனால், காங்கிரஸ் கட்சி அவரது முதுகில் குத்திவிட்டது” என்றார் மோடி.
தெலங்கானாவில் பிரசாரம் மேற்கொண்ட அமித ஷாவும், “பாஜக ஆட்சிக்கு வந்தால் இஸ்லாமியர்களுக்கு வழங்கப்பட்டு வரும் 4 சதவீத இட ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டு அது இதர பிற்படுத்தப்பட்டோர் மற்றும் எஸ்.சி, எஸ்.டி பிரிவினருக்கு பகிர்ந்தளிக்கப்படும்” என பேசினார்.
“எனவே, ஓ.பி.சி இடஒதுக்கீட்டிலிருந்து முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்கியிருப்பது சட்டவிரோதம். ஆகவே, இந்த நாட்டிலுள்ள ஒட்டுமொத்த ஓ.பி.சி-க்களுக்குமான அபாய எச்சரிக்கை இது’ என்றார் மோடி. இதன் மூலம், இந்தியா முழுவதும் ஒட்டுமொத்த ஓ.பி.சி வாக்குகளையும் கவருவதற்கு பிரதமர் மோடி முயற்சி செய்திருக்கிறார்.
சாதிவாரி கணக்கெடுப்புக்கு எதிராக இருப்பதால், பா.ஜ.க மீது ஓ.பி.சி சமூகத்தினர் கோபத்தில் இருக்கிறார்கள் என்று செய்திகள் தெரிவிக்கின்றன. சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தினால்தான், இடஒதுக்கீட்டில் உரிய பங்கு ஓ.பி.சி சமூகத்தினரைச் சென்றடையும் என்ற நிலையில், சாதிவாரி கணக்கெடுப்புக்கு எதிராக பா.ஜ.க இருக்கிறது. அதனால், ஓ.பி.சி சமூகத்தினரின் வாக்குகள் பா.ஜ.க-வுக்கு முழுமையாக கிடைக்காது என்ற நிலையில்தான், கார்நாடகாவில் முஸ்லிம் இடஒதுக்கீடு விவகாரத்தை மோடி கையிலெடுத்திருக்கிறார் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.
இந்த விவகாரத்தில் பிரதமர் மோடிக்கு கர்நாடகா முதல்வர் சித்தராமையா பதில் சொல்லியிருக்கிறார். “ஓ.பி.சி இடஒதுக்கீட்டிலிருந்து முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்கப்பட்டிருப்பது உண்மைதான். அந்த இடஒதுக்கீடு இப்போது வழங்கப்பட்டது அல்ல. கடந்த 30 ஆண்டுகளாக இந்த இடஒதுக்கீடு நடைமுறையில் இருக்கிறது. இந்த இடஒதுக்கீடு குறித்து கடந்த காலங்களில் கர்நாடகாவில் இருந்த பா.ஜ.க அரசோ, கடந்த பத்தாண்டு காலம் மத்தியில் இருந்த பா.ஜ.க அரசோ கேள்வி எழுப்பவில்லை. பா.ஜ.க உள்பட யாரும் இந்த இடஒதுக்கீட்டுக்கு எதிராக நீதிமன்றம் செல்லவில்லை” என்று தனது எக்ஸ் பக்கத்தில் சித்தராமையா கூறியிருக்கிறார்.
இந்த விவகாரத்தில் கர்நாடகா மாநில தலைமைச்செயலாளருக்கு பிற்பட்ட வகுப்பினருக்கான தேசிய ஆணையத்தின் தலைவர் சம்மன் அனுப்பியிருக்கிறார். ‘ஓ.பி.சி பிரிவினருக்கான இடஒதுக்கீட்டில் முஸ்லிம்கள் எப்படி சேர்க்கப்பட்டார்கள் என்பது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும்’ என்று அந்த ஆணையம் கர்நாடகா தலைமைச்செயலாளருக்கு உத்தரவிட்டிருக்கிறது.
‘இதற்கு முன்பு பிரதமர் மோடி கர்நாடகாவுக்கு வந்ததே இல்லையா… இப்போது தேர்தல் பிரசாரத்தில் முஸ்லிம் இடஒதுக்கீடு பற்றி ஏன் அவர் பேசுகிறார்? ஓட்டுக்காக ஒரு பிரதமர் இப்படி வெறுப்புப் பேச்சு பேசலாமா?’ என்று கேள்வி எழுப்புகிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3OITqxs