புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை அருகே குடிநீர் தொட்டியில் மாட்டு சாணம் கலந்ததாக எழுந்த புகார் தொடர்பாக அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதுதொடர்பாக ஊராட்சி செயலாளருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை அருகே சங்கம்விடுதி ஊராட்சி குருவாண்டான் தெருவில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் கழிவுகள் கலந்த நிலையில் நேற்று முன்தினம் மாட்டு சாணம் கலந்த குடிநீர் வந்ததாக தகவல் பரவியது.
தகவலறிந்த வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பெரியசாமி, பால்பிரான்சிஸ் ஆகியோர் அங்கு சென்று விசாரித்தனர். மேலும், அந்த குடிநீர் தொட்டி கழுவி சுத்தம் செய்யப்பட்டது. தொட்டியில் இருந்து மாதிரி சேகரித்து ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த ஆய்வு முடிவு வந்த பிறகே என்ன மாதிரியான கழிவு கலக்கப்பட்டது என்றவிவரம் தெரியவரும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக கந்தர்வக்கோட்டை வட்டாட்சியர் விஜயலட்சுமி, புதுக்கோட்டை டிஎஸ்பி ராகவி உள்ளிட்டோர் ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டனர். அங்கு போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்பகுதி மக்களுக்கு நேற்று லாரி மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டது. மேலும், அங்கு வட்டார மருத்துவ அலுவலர் மணிமாறன் தலைமையில் மருத்துவ முகாம் நடைபெற்றது.
இந்நிலையில், குடிநீர் தொட்டி கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாககழுவி சுத்தம் செய்யப்படவில்லை என முதற்கட்ட ஆய்வில் தெரியவந்ததைத் தொடர்ந்து, சங்கம்விடுதி ஊராட்சி செயலாளர் காளிமுத்துவுக்கு விளக்கம் கேட்டு வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நேற்று நோட்டீஸ் அனுப்பி உள்ளனர்.
ராமதாஸ் கண்டனம்: இதுகுறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் விடுத்துள்ள அறிக்கை: குடிநீர்த் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்பட்டது மனிதத் தன்மையற்ற செயலாகும்.
தமிழகத்தில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக இதுபோன்ற சம்பவங்கள் நடப்பது அதிகரித்து விட்டது. அதிலும் குறிப்பாக பள்ளிகளிலும், பட்டியலின மக்கள் வாழும் பகுதிகளிலும் இத்தகைய நிகழ்வுகள் தொடர்வது மிகுந்த கவலையும், வேதனையும் அளிக்கிறது. இதைத் தடுக்க தமிழக அரசு தவறிவிட்டது.
வேங்கைவயல் சம்பவம் நடைபெற்று 17 மாதங்களாகியும் இதுவரை குற்றவாளிகள் கண்டறியப்படாதது தான், மீண்டும் இதுபோன்ற சம்பவம் நிகழ்வதற்கு காரணம் ஆகும். எனவே, வேங்கைவயல் விவகாரத்தில் தமிழகஅரசு இனியும் உறங்கிக் கொண்டிருக்காமல் குற்றவாளிகளை அடையாளம் கண்டு, கடுமையான தண்டனை பெற்றுத்தர வேண்டும்.