ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் பாரமுல்லா மாவட்டத்தில் இரண்டாவது நாளாக நேற்று பாதுகாப்புப் படையினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச் சூடு நடைபெற்றது. இதில் 2 தீவிரவாதிகள் உயிரிழந்ததாகவும், 2 பாதுகாப்புப் படை வீரர்கள் காயமடைந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பாராமுல்லா மாவட்டத்தின் சோபோர் பகுதியில் உள்ள செக் மொஹல்லா நவ்போராவில் நேற்று முன்தினம் பாதுகாப்புப் படையினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அன்றைய தின நள்ளிரவில் துப்பாக்கிச் சூடு நிறுத்தப்பட்டது. ஆனால், நேற்றைய தினம் மீண்டும் துப்பாக்கிச் சூடு தொடங்கியது.
இது குறித்து பாதுகாப்புப் படை அதிகாரிகள் கூறுகையில், “இந்தச் துப்பாக்கிச் சூட்டில் 2 தீவிரவாதிகள் உயிரிழந்தனர். 2 பாதுகாப்புப் படை வீரர்கள் காயமடைந்தனர். அவர்களுக்கு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்தச் துப்பாக்கிச் சூட்டின்போது, அப்பகுதியில் வசித்து வந்த நபர் ஒருவர் காயமடைந்தார். அவருக்கும் சிகிச்சை வழங்கப்படுகிறது” என்று தெரிவித்தார்.