நாட்டில் நடைபெறும் தேர்தலில் பல கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். அவர்களில் ஒருவருக்கும் வாக்களிக்க விரும்பவில்லை, அவர்கள் அனைவருக்கும் எதிராக வாக்களிக்க விரும்புபவர்களுக்காக ‘நோட்டா’ என்ற வசதி அறிமுகம் செய்யப்பட்டது. வாக்காளர்களின் உரிமையை உறுதிப்படுத்தும் நோக்கில் தேர்தல் சட்டத்திட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.
மேலும், கடந்த 2013-ம் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின்படி மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் ‘நோட்டா’வுக்கென தனிச் சின்னத்துடன் பொத்தான் சேர்க்கப்பட்டது.
இந்நிலையில், தன்னம்பிக்கை ஊட்டும் பேச்சாளரும் எழுத்தாளருமான ஷிவ் கெரா உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: ஒரு தொகுதியில் நோட்டாவுக்கு அதிக வாக்குகள் கிடைத்து, வேட்பாளர்கள் குறைந்த வாக்குகள் பெற்றால், அங்கு மறு தேர்தல் நடத்த வேண்டும்.
அத்துடன், ‘புனைவு வேட்பாளர்’ என்று நோட்டா பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். தவிர ஒரு தொகுதியில் நோட்டாவை விட குறைந்த வாக்குகள் பெறும் வேட்பாளர், அதே தொகுதியில் நடைபெறும் இடைத்தேர்தலில் போட்டியிட தடை விதிக்க வேண்டும்.
அத்துடன் நோட்டாவை விட குறைந்த வாக்குகள் பெறும் வேட்பாளர்கள் 5 ஆண்டுகளுக்கு எந்த தேர்தலிலும் போட்டியிட தடை விதிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் ஷிவ் கெரா கூறியுள்ளார்.
இந்த மனுவை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் ஜே.பி. பர்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அமர்வு நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. பின்னர் இந்த மனுவுக்கு பதில் அளிக்கும்படி தலைமை தேர்தல் ஆணையத்துக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்.