புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை அருகே உள்ள சங்கம்விடுதி ஊராட்சிக்கு உட்பட்ட குருவாண்டான்தெரு பகுதியில் 30-க்கும் மேற்பட்ட பட்டியலின மக்களும், 270 மாற்று சமூகத்தை சேர்ந்தவர்களும் வசித்து வருகின்றனர். இந்நிலையில், பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த குடும்பத்தினருக்கும், அதேபோல் மாற்று சமூகத்தைச் சேர்ந்த சுமார் பத்து குடும்பங்களை சேர்ந்தவர்களுக்கும் குடி தண்ணீர் வினியோகம் செய்யும் பத்தாயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி ஒன்று உள்ளது. இந்நிலையில் இந்த தொட்டியிலிருந்து வரும் தண்ணீரை குடித்ததால் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த ஒரு சிலருக்கு கடந்த ஒரு சில தினங்களாக வயிற்று வலி, வாந்தி மயக்கம் ஏற்பட்டதாகவும், அவர்கள் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று பின்னர் வீடு திரும்பியதாகவும் கூறப்படுகிறது. இதனால், சம்பந்தப்பட்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் அந்தப் பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் மற்றும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை தூய்மைப்படுத்தும் நபர் ஆகியோர் ஏறிப் பார்த்தபோது அதில் மாட்டு சாணம் இருந்ததாக கூறப்படுகிறது.
இதனால், அதிர்ச்சியடைந்த மக்கள் இதுகுறித்து கந்தர்வகோட்டை வட்டார வளர்ச்சி அலுவலருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இந்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்களிடம் பட்டியல் சமூக மக்கள், ‘குடிநீர் தொட்டியில் மாட்டுச் சாணத்தை கலந்தவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதுடன் சம்பந்தப்பட்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை தூய்மைப்படுத்தி தர வேண்டும். அதேபோல் தங்கள் பகுதியில் மருத்துவ முகாம் நடத்த வேண்டும்’ என்று கோரிக்கை விடுத்தனர். அதனைத்தொடர்ந்து, கந்தர்வகோட்டை வட்டார வளர்ச்சி அலுவலர் சம்பந்தப்பட்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் தண்ணீரை எடுத்து ஆய்வுக்கு அனுப்பி வைத்தார்.
அதேபோல், ‘தண்ணீரில் மாட்டு சாணம் கலந்தது உறுதியானால் கலந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். சம்பந்தப்பட்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை தூய்மைப்படுத்தப்படும்’ என்று உறுதியளித்ததை தொடர்ந்து, சம்பந்தப்பட்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி தூய்மைப்படுத்தப்பட்டது. மேலும், அந்தப் பகுதி மக்களுக்கு தற்காலிகமாக மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் இருந்து விநியோகிக்கப்படும் குடிநீர் நிறுத்தப்பட்டு தண்ணீர் லாரி மூலம் தண்ணீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது. அதேபோல், “வட்டார வளர்ச்சி அலுவலர் சம்பந்தப்பட்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியிலிருந்து பட்டியல் சமூக மக்களுக்கும், அதே போல் மாற்று சமூகத்தைச் சேர்ந்த சுமார் 10 குடும்பங்களுக்கும் தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டு வரக்கூடிய நிலையில் பட்டியல் சமூக மக்களுக்கு மட்டும்தான் பாதிப்பு இருப்பதாக கூறுகின்றனர். இதுகுறித்து உரிய விசாரணை நடத்தி தவறு நடந்திருக்கும் பட்சத்தில் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று உறுதி அளித்துள்ளார். தவிர, சம்பந்தப்பட்ட கிராமத்தில் கந்தர்வகோட்டை வட்டாட்சியர், புதுக்கோட்டை நகர காவல் துறை துணை கண்காணிப்பாளர் ராகவி ஆகியோர் நேரில் சென்று விசாரணை நடத்தினர்.
தற்போது அந்த கிராமத்தில் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் தான், பொதுமக்கள் தங்கள் பகுதியில் மருத்துவ முகாம் நடத்த வேண்டும் என்று வைத்த கோரிக்கையை ஏற்று, சுகாதாரத் துறை சார்பில் அந்த பகுதியில் மருத்துவ முகாம் நடத்தப்பட்டுள்ளது. இந்த மருத்துவ முகாமில் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த மக்கள் பங்கேற்றுள்ள நிலையில், அவர்களது உடல் பரிசோதனை செய்யப்பட்டு அவர்களுக்கு தேவையான மருந்து மாத்திரைகள் மற்றும் ஓஆர்எஸ் கரைசல் வழங்கப்பட்டுள்ளது. அதேபோல், அந்த மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் இருந்து தண்ணீர் எடுத்து ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது. ஆய்வு முடிவு வந்தால்தான் அந்த தண்ணீரில் மாட்டுச் சாணம் கலக்கப்பட்டுள்ளதா அல்லது அது தண்ணீர் தொட்டி தூய்மைப்படுத்தப்படாததால் ஏற்படும் பாசியா என்பதும் தெரியவரும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மாட்டுச் சாணம் கலக்கப்பட்டுள்ளதாக எழுந்துள்ள புகாரால், புதுக்கோட்டை மாவட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3OITqxs