அமராவதி: மக்களை பாதுகாக்கவும், எதிர்காலத்தை காக்கவுமே பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிப்பதாக ஆந்திர முன்னாள் முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.
தனியார் ஊடகம் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் சந்திரபாபு நாயுடு கூறியிருப்பதாவது: “ஆந்திராவின் வளர்ச்சியையும், எதிர்காலத்தையும் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி ஏற்கெனவே அழித்துவிட்டார். எனவே அதனை பாதுகாப்பதற்கான பொறுப்பு என்னுடையது. மாநிலம் ஒரு ஆழமான பொறியில் சிக்கியுள்ளது. இதற்கு முன்பு எந்தவொரு அரசாங்கமும் இப்படி செய்தது கிடையாது.
அரசு சொத்துக்கள் அனைத்தையும் ஜெகன் விற்றுவிட்டார். மக்களையும், அவர்களது எதிர்காலத்தையும் நான் காப்பாற்ற வேண்டும். ஆந்திராவுக்கான சிறப்பு அந்தஸ்து விவகாரம் தவிர பொருளாதார சீர்திருத்தங்கள், வளர்ச்சி ஆகிய விஷயங்களில் எங்களுக்கும் பாஜகவுக்கு எந்த ஒரு கருத்து வேறுபாடும் கிடையாது.
பிரதமர் மோடியின் தலைமையில் நாட்டுக்கு உள்ளேயும், சர்வதேச அளவிலும் இந்தியா முன்னேறிச் சென்று கொண்டிருக்கிறது. இந்தியாவுக்கும், உலகம் முழுவதுமுள்ள இந்தியர்கள் அனைவருக்கும் ஒரு சிறந்த தலைமையை அவரால் கொடுக்க முடியும்” இவ்வாறு சந்திரபாபு நாயுடு தெரிவித்தார்.
கடந்த 2018ஆம் ஆண்டு பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து சந்திரபாபு நாயுடு வெளியேறினார். அதன்பிறகு தற்போது கடந்த மார்ச் மாதம் மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்தார்.