மெக்சிகோ சிட்டி,
கரீபிய நாடான ஹைதியில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஆயுதக் குழுவினரின் வன்முறை தாக்குதல்களால் பல ஆண்டுகளாக மக்கள் இன்னல்களை அனுபவித்து வருகின்றனர். 2021-ல் ஜனாதிபதி ஜோவனல் மோயிஸ் படுகொலை செய்யப்பட்டபின் வன்முறை மேலும் அதிகரித்துள்ளது. ஜனாதிபதி பதவிக்கான தேர்தல் கடந்த மாதம் (பிப்ரவரி) 7-ம் தேதிக்குள் நடத்தப்பட்டிருக்கவேண்டும். ஆனால், அரசாங்கம் தேர்தலை நடத்த தவறியதால் சமூக பதற்றம் அதிகரித்துள்ளது.
இதனையடுத்து பிரதமர் ஏரியல் ஹென்றி பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி கடந்த பிப்ரவரி மாத இறுதியில் இருந்து தலைநகர் போர்ட்-ஓ-பிரின்ஸில் உள்ள பொது இடங்கள் மீது ஆயுதக்குழுக்கள் தாக்குதல்களை நடத்தி வந்தனர். இந்த தொடர் வன்முறை மற்றும் சர்வதேச அழுத்தங்களுக்கு பணிந்த பிரதமர் ஏரியல் ஹென்றி, நாட்டை வழிநடத்த இடைக்கால கவுன்சில் உருவாக்கப்பட்டவுடன் ராஜினாமா செய்வதாக கடந்த மாதம் அறிவித்தார்.
இந்நிலையில், ஏரியல் ஹென்றி தனது பிரதமர் பதவியை நேற்று ராஜினாமா செய்தார். இவருக்கு பதிலாக இடைக்கால பிரதமராக பொருளாதாரம் மற்றும் நிதி மந்திரி மைக்கெல் பேட்ரிக் போயிஸ்வர்ட் நியமிக்கப்பட்டுள்ளார் என உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேலும் நாட்டை வழிநடத்த இடைக்கால கவுன்சில் நேற்று உருவாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதுதொடர்பாக ஹென்றி நேற்று ஒரு கடிதத்தை தனது சமூக ஊடகங்களில் வெளியிட்டார். அதில், அரசாங்கத்தின் அனைத்து உறுப்பினர்களுக்கும், ஒத்துழைப்பாளர்களுக்கும், பொது நிர்வாகம், பாதுகாப்புப்படையினர் மற்றும் எனது ஆணையின்போது என்னுடன் இருந்த அனைவருக்கும் நன்றி. என்னுடன் இந்த சவால்களை எதிர்கொள்ள தைரியமாக இருந்த அனைவருக்கும் நான் நன்றி கூறுகிறேன் என்று தெரிவித்திருந்தார்.