India Squad for T20 World Cup 2024: டி20 உலகக் கோப்பைக்கான அணி அறிவிப்புக்கு முன்னதாக அஜித் அகர்கர் தலைமையிலான இந்தியத் தேர்வுக் குழு சில முக்கிய முடிவுகளை எடுக்க உள்ளது. பல நட்சத்திர வீரர்கள் இந்த அணியில் இடம் பெறாமல் போவதற்கு அதிக வாய்ப்புள்ளது. அதே சமயம் சில இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்க உள்ளது. யார் யார் அணியில் இடம் பெற போகிறார்கள் என்று யாராலுமே சொல்ல முடியாத நிலை தற்போது உள்ளது. அமெரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகளில் இந்த ஆண்டு உலக கோப்பை நடைபெற உள்ளது. ஐபிஎல் 2024ல் சிறப்பாக விளையாடி வரும் வீரர்களையும் பிசிசிஐ தற்போது கவனித்து வருகிறது. சில இளம் வீரர்களும் சிறப்பாகா விளையாடி வருவதல்ல தேர்வாளர்களுக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தி உள்ளது. ஜூன் மாதம் உலக கோப்பை தொடங்க உள்ள நிலையில், மே மாத தொடக்கத்தில் அணி அறிவிக்கப்படும்.
இந்தியாவின் உலக கோப்பை அணியில் ஒரு சில வீரர்களின் பெயர்கள் ஏற்கனவே உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மூத்த வீரர்களான விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஓப்பனிங் செய்ய உள்ளனர். மிடில் ஆர்டரில் சூர்யகுமார் யாதவ் இடமும், வேகப்பந்து வீச்சாளர் பட்டியலில் ஜஸ்பிரித் பும்ரா இடமும், சுழற்பந்து வீச்சில் குல்தீப் யாதவ் பெயரும் உறுதியாகி உள்ளது. அர்ஷ்தீப் சிங் இந்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் சிறப்பாக பந்துவீசி வருகிறார். பேட்டிங் ஆல்ரவுண்டரான ஹர்திக் பாண்டியா, இந்த சீசன் முழுவதும் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என எதிரிலும் சிறப்பாக விளையாடவில்லை. இது தேர்வாளர்களுக்கு மிகப்பெரிய கவலையாக உள்ளது. இருப்பினும், ஹர்திக் தேர்வு செய்யப்பட அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் ஷிவம் துபே மற்றும் ரிங்கு சிங் ஆகியோர் உலக கோப்பை அணியில் இடம் பெற கடுமையாக போராடி வருகின்றனர்.
ஷிவம் துபே பந்துவீச முடியும் என்பதால் ரிங்குவிற்கு முன் அவர் தேர்வாக அதிக வாய்ப்புள்ளது. இந்திய அணியில் தற்போது விக்கெட் கீப்பிங்/பேட்டருக்குத்தான் அதிக போட்டி உள்ளது. இஷான் கிஷன், ரிஷப் பந்த், கே.எல்.ராகுல், ஜிதேஷ் சர்மா, சஞ்சு சாம்சன், தினேஷ் கார்த்திக் என ஆறு போட்டியாளர்கள் உள்ளனர். ஆனால் உண்மையில் இந்த இடத்திற்கு கடுமையாக போராடி வருவது பந்த், சாம்சன் மற்றும் ராகுல் தான். இந்த மூன்று பேரில் ஒருவர் அல்லது இரண்டு பேர் தேர்வு செய்யப்படலாம். குல்தீப் தவிர இன்னொரு ஸ்பின்னர் தேவை. இந்த இடத்திற்கு அக்சர் படேலுக்கும் யுஸ்வேந்திர சாஹலுக்கும் போட்டியிட்டு வருகின்றனர்.
பின்னர் வேகப்பந்து வீச்சாளர்களில் பும்ரா, அர்ஷ்தீப் தவிர இந்தியாவுக்கு மேலும் 2 வேகப்பந்து வீச்சாளர்கள் தேவை. இந்த இடங்களுக்கு கலீல் அகமது, டி நடராஜன், ஹர்ஷல் படேல், மோகித் ஷர்மா, முகேஷ் குமார் ஆகியோர் போட்டி போட்டு வருகின்றனர். முகமது ஷமி காயத்தாலும், முகமது சிராஜ் பார்மில் இல்லாத நிலையில், தேர்வுக்குழு குழப்பத்தில் இருந்து வருகிறது. மயங்க் யாதவ் தேர்வு செய்யப்பட்டால் ஆச்சரியமான முடிவாக இருக்கலாம்.