அப்பாவாக நடிப்பது பெருமை: சமுத்திரகனி

தெலுங்கு காமெடி நடிகர் தன்ராஜ் இயக்குனராக அறிமுகமாகும் படம் 'ராமம் ராகவம்'. தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகியுள்ள இந்த படம் தந்தை, மகன் உறவின் பின்னணியில் உருவாகி உள்ளது. தந்தையாக சமுத்திரகனி, மகனாக தன்ராஜ் நடித்துள்ளனர். ஹீரோயினாக கோல்கட்டா நடிகை மோக்ஷா நடித்துள்ளார். பிருத்தவி போலவரபு தயாரித்துள்ளார். இப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இயக்குனர் பாலா, சூரி, தம்பி ராமய்யா, பாபி சிம்ஹா, தீபக், ஹரீஷ் குமார், பாண்டிராஜ் என்.கே.ஏகாம்பரம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் சமுத்திரகனி பேசியதாவது: ஒவ்வொரு தந்தையும் ஒரு சகாப்தம். இதுவரை பத்துக்கும் மேற்பட்ட அப்பா கதைகளில் நடித்துவிட்டேன். ஒவ்வொன்றும் தனி அனுபவம். 'டான்' படத்தில் சிவகார்த்திகேயனின் தந்தையாக நடித்தேன். டப்பிங் பேசும்போது எனக்கு நெஞ்சை அடைத்தது. சில நாட்கள் பேசவில்லை. 'ராமம் ராகவம்' படத்துக்கு டப்பிங் பேசும்போதும் நெஞ்சை அடைத்தது. தன்ராஜூக்கு தந்தையும், தாயும் இல்லை. தானே உழைத்து முன்னேறி இருக்கிறார். ஒரு தந்தைக்கும், மகனுக்கும் இடையிலுள்ள சிக்கல்கள் குறித்து படம் பேசுகிறது. அப்பாவாக நடிப்பதே பெருமைதான்.

ஒவ்வொரு முறையும், சிறிய படங்களை எடுத்துவிட்டு அதனை மக்களிடம் கொண்டு போய் சேர்க்க போராட வேண்டியுள்ளது. 'அப்பா ' என ஒரு படம் எடுத்தேன். இன்றுவரை அது என்ன ஆனது என்பது குறித்த கணக்கே எனக்கு வரவில்லை . இப்படித்தான் இன்றைய சூழல் உள்ளது. பேரன்புடன் படத்தை எடுத்துவிடுகிறோம். அதை கொண்டு போய் சேர்க்கும்போது மகிழ்ச்சியே இருபதில்லை. அதற்கான வழியும் தெரியவில்லை. இந்த படத்தை மீடியாக்கள்தான் மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.