புதுடெல்லி: அமெரிக்காவில் நிகழ்ந்த கார் விபத்தில் குஜராத் மாநிலத்தை சேர்ந்த 3 பெண்கள் உயிரிழந்தனர். கார் அதிவேகமாக சென்றதே விபத்துக்கு காரணம் என்று தெரிய வந்துள்ளது.
குஜராத் மாநிலத்தின் ஆனந்த்மாவட்டத்தைச் சேர்ந்த ரேகாபென் படேல், சங்கீதாபென் படேல், மணிஷாபென் படேல் உள்ளிட்ட 4 பேர், அமெரிக்காவின் தெற்கு கரோலினா மாநிலம் கிரீன்வில்லி கவுன்ட்டி பகுதியில் நேற்று முன்தினம் காரில் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது இவர்களின் கார் திடீரென சாலையை விட்டு விலகிச் சென்று அதிவேகத்தில் மரத்தின் மீது மோதியதில் ரேகாபென், சங்கீதாபென், மணிஷாபென் ஆகிய மூவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ஒருவர் காயம் அடைந்தார்.
கார் விபத்து குறித்து போலீஸ்அதிகாரி ஒருவர் கூறும்போது, “இவர்களின் கார் மாநிலங்களுக்கு இடையிலான ஐ-85 நெடுஞ்சாலையில் வடக்கு நோக்கி பயணித்தது,திடீரென அனைத்து பாதைகளையும் கடந்து, ஒரு கரை மீது ஏறியது.பிறகு 20 அடி உயரத்தில் பறந்துசென்று எதிர்ப்புறத்தில் உள்ள மரங்களின் மீது மோதியது.
வேக வரம்பை மீறி அதிக வேகத்தில் பயணித்ததே விபத்துக்கு காரணம் என்பது தெளிவாகத் தெரிகிறது. இந்த விபத்தில் வேறு எந்த வாகனத்துக்கும் தொடர்பில்லை” என்றார்.
காரில் பொருத்தப்பட்டிருந்த வாகனத்தை கண்டறியும் அமைப்பானது, விபத்து குறித்து குடும்ப உறுப்பினர்களை எச்சரித்தது. பிறகு அவர்கள் உள்ளூர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து நெடுஞ்சாலைத் துறை ரோந்து் குழுவினர் மற்றும்தீயணைப்புத் துறையினர் சம்பவஇடத்துக்கு சென்றனர். விபத்தில்காயம் அடைந்தவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.