புதுடெல்லி: உத்தரபிரதேசத்தில் இரண்டுகட்ட தேர்தல் முடிந்த பிறகும் காங்கிரஸ்தீவிரம் காட்டாமல் இருப்பதாகப் புகார் எழுந்துள்ளது. இங்கு சோனியா, ராகுல், கார்கே உள்ளிட்டமுக்கியத் தலைவர்கள் எவரும்இதுவரை எந்த பொதுக்கூட்டத்திலும் பங்கேற்கவில்லை.
80 மக்களவைத் தொகுதிகள் கொண்ட உ.பி.யில் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. இங்குஇண்டியா கூட்டணியில் காங்கிரஸ் 17, சமாஜ்வாதி 63 இடங்களில் போட்டியிடுகின்றன. இதுவரை முடிந்த இரண்டுகட்ட தேர்தலில் 16 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு முடிந்துள்ளது. இவற்றில் இரண்டாவது கட்டத்தின் 8 தொகுதிகளில் காங்கிரஸ் நான்கில் போட்டியிடுகிறது.
இச்சூழலில், முதல்கட்ட தேர்தலின் கடைசி நாளில் ராகுல் காந்தி, காஜியாபாத்தின் செய்தியாளர் கூட்டத்தில் மட்டும் சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவுடன் கலந்து கொண்டார். பிறகு கட்சியின்தேசிய பொதுச் செயலாளர் பிரியங்கா வத்ரா, சஹரான்பூர் ரோடு ஷோவில் கலந்துகொண்டார். ஆனால் இந்த இருவரும் தேசியதலைவர் மல்லிகார்ஜுன கார்கேவும் இதுவரை பெரிய பிரச்சாரக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை. எனவே மீதம் உள்ள 64 தொகுதிகளிலாவது காங்கிரஸ் வெற்றிக்கான அக்கறை காட்டுமா எனும் கேள்வி எழுந்துள்ளது.
உ.பி.யில் காங்கிரஸ் மாநிலத் தலைவர் அஜய்ராய், மேலிட பொறுப்பாளர் அவினாஷ் சந்திராஆகியோரிடம் தேர்தல் கூட்டங்களுக்கான பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது. இவர்கள் இதுவரை வெறும் 6 கூட்டங்கள் மட்டும் மேற்குஉ.பி.யில் நடத்தியுள்ளனர். இதில்காங்கிரஸ் முக்கியத் தலைவர்கள்பங்கேற்கவில்லை. சமாஜ்வாதியுடன் இணைந்தும் காங்கிரஸ் தலைவர்கள் எந்தக் கூட்டத்தையும் நடத்தவில்லை. உ.பி.யில் காங்கிரஸாரிடம் பெரிய அளவில் உற்சாகம் இல்லை எனப் புகார் உள்ளது.
இதுகுறித்து ‘இந்து தமிழ் திசை’நாளிதழிடம் உ.பி. காங்கிரஸ் நிர்வாகிகள் வட்டாரம் கூறும்போது, “அமேதி, ரேபரேலி போன்ற காங்கிரஸின் முக்கிய தொகுதிகளில் கூட இதுவரை வேட்பாளர்கள் அறிவிக்கப்படாதது பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது. இங்கு ராகுல்,பிரியங்கா வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பிறகு இருவரும் அயோத்திசென்று ராமரை தரிசனம் செய்தால்தான் வெற்றிக்கு வழிவகுக்கும்” என்று தெரிவித்தனர்.
பிஹாரில் கடந்த 2020 சட்டப்பேரவை தேர்தலில் மொத்தமுள்ள 243 தொகுதிகளில் காங்கிரஸுக்கு 70 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. ஆனால் அக்கட்சி வெறும் 19 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. தேர்தல் பிரச்சாரத்தில் அக்கறை காட்டாததே இதற்கு காரணமாக கூறப்பட்டது. அதேவேளையில் கூட்டணிக் கட்சியான லாலுவின் ராஷ்ட்ரிய ஜனதா தளம் 114 தொகுதிகளில் போட்டியிட்டு 75 இடங்களில் வெற்றி பெற்றது.
இந்நிலையில், காங்கிரஸ் சார்பில் உ.பி.க்கான நான்காவது நட்சத்திரப் பேச்சாளர்கள் பட்டியல் வெளியாகி உள்ளது. இதில், சோனியா, ராகுல், பிரியங்கா வதேரா, மல்லிகார்ஜுனா கார்கே ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.