சென்னையில் போக்குவரத்துக்கு இடையூறாக சட்டவிரோதமாக வாகனங்கள் நிறுத்தப்படுவதைத் தடுப்பதற்கான புதிய கொள்கை திட்டம் மூன்று மாதங்களுக்குள் இறுதி செய்யப்படும் என தமிழ்நாடு அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் பதிலளித்திருக்கிறது.
மக்கள்தொகைப் பெருக்கத்திற்கேற்ப, வாகனங்களின் எண்ணிக்கையும் பயன்பாடும் மிக வேகமாக வளர்ந்துவருகிறது. தமிழ்நாட்டில் கடந்த நான்கு ஆண்டுகளில் மட்டும் சுமார் 35% வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக, மக்கள் அடர்த்தியாக வாழும் தலைநகர் சென்னையில் வாகனங்களின் எண்ணிக்கை கட்டுக்கடங்காமல் அதிகரித்திருப்பதால், வாகன நிறுத்தங்களுக்கு போதுமான இடவசதி இல்லாமல் போய்விட்டது. இதன்விளைவாக, `நோ பார்க்கிங்’ பகுதிகள், பிரதான சாலையோரங்கள் என சட்டவிரோத வாகன பார்க்கிங் செய்யும் முறை வாடிக்கையாகிவருகின்றன. இதனால், தலைநகரெங்கும் போக்குவரத்து நெரிசல் நாளுக்குநாள் கடுமையாகிக்கொண்டிருக்கின்றன.
அந்த நிலையில், கடந்த 2021-ம் ஆண்டு ஶ்ரீகிருஷ்ண பகவத் எனும் நபர் சென்னை சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார். அந்த மனுவில், `சென்னையில் சட்டவிரோதமாக வாகனங்கள் நிறுத்தப்படுவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்; வாகன நிறுத்த மேலாண்மை தொடர்பாக முறையான விதிகளை வகுக்க தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட வேண்டும்’ எனக் கோரி உயர் நீதிமன்றத்தை நாடியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், சட்டவிரோத வாகன நிறுத்தத்தை தடுப்பதற்கு முறையான திட்டம் மற்றும் கொள்கையை வகுக்கும்படி தமிழ்நாடு அரசுக்கும் சென்னை மாநகராட்சிக்கும் உத்தரவிட்டது.
இந்த வழக்கு, கடந்த வாரம் சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கங்காபுர்வாலா, நீதிபதி சத்தியநாராயண பிரசாத் அடங்கிய அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, சட்ட விரோத வாகன பார்க்கிங் தொடர்பான மனுவுக்கு பதில் அறிக்கை தமிழ்நாடு அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்டது. தமிழ்நாடு அரசின் அந்த பதில் அறிக்கையில், `சட்டவிரோதமாக வாகனங்கள் நிறுத்துவதைத் தடுக்கும் வகையில் பார்க்கிங் தொடர்பான வரைவுக் கொள்கையை வகுக்க மாநகராட்சி திட்டமிட்டிருக்கிறது. இந்த கொள்கை வரைவை தயாரிக்க சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து ஆணையத்துக்கு (Chennai Unified Metropolitan Transport Authority (CUMTA)) தமிழ்நாடு அரசு உத்தரவிட்டிருக்கிறது. மேலும், சம்பந்தப்பட்ட துறைகளின் கருத்துகளைப் பெற்ற பின்னர், மூன்று மாதங்களுக்குள் இந்த கொள்கை இறுதி செய்யப்படும்’ என்றும் உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தெரிவித்திருக்கிறது.
அதாவது, கடந்த மார்ச் 11-ம் தேதி தலைமைச் செயலர் ஷிவ்தாஸ் மீனா தலைமையில் சட்டவிரோத பார்க்கிங் தொடர்பாக ஒரு கூட்டம் நடைபெற்றதாகவும், அந்தக் கூட்டத்தில் CUMTA-வின் வரைவுக் கொள்கை சமர்ப்பிக்கப்பட்டதாகவும், அதில் சில பரிந்துரைகள் இணைக்கப்பட்டிருப்பதாகவும் தமிழ்நாடு அரசு சார்பில் நீதிமன்றத்தில் பதிலளிக்கப்பட்டிருக்கிறது. இந்த வரைவுக் கொள்கை தயாரிக்கப்பட்டு, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, வீட்டு வசதி மற்றும் போக்குவரத்து துறை, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் உள்ளிட்ட துறைகளின் கருத்துக்களுக்காக அனுப்பப்பட்டிருப்பதாகவும், அந்தத் துறைகளின் கருத்துகளைப் பெற்ற பிறகு, கொள்கை இறுதி செய்யப்பட்டு திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் தமிழ்நாடு அரசு தெரிவித்திருக்கிறது.
அரசுத் தரப்பு விளக்கத்தைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் இருவரும், `சட்டவிரோதமாக சாலைகளில் வாகனங்களை இடையூறாக நிறுத்துவதால் பொதுமக்களுக்கு கடும் சிரமம் ஏற்படுகிறது; இதைத் தவிர்க்கும் வகையிலும், சட்டவிரோத வாகன நிறுத்தத்தை தடுக்கும் வகையிலும் இறுதிக் கொள்கையை வகுத்து, அதை கண்டிப்புடன் நடைமுறைப்படுத்த வேண்டும்’ என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர். மேலும், இந்தக் கொள்கையை இறுதி செய்வதில் நியாயமற்ற தாமதம் ஏற்பட்டால் மனுதாரர் மீண்டும் நீதிமன்றத்தை அணுகி முறையிடலாம் என்றும் நீதிபதிகள் கங்காபுர்வாலா, சத்தியநாராயண பிரசாத் அடங்கிய அமர்வு அறிவுறுத்தியிருக்கிறது.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய தமிழக அரசு தரப்பு வழக்கறிஞர் ஏ.எட்வின் பிரபாகர், “தற்போது, நாடாளுமன்றத் தேர்தல் சூழலில், மாநிலம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால், நன்னடத்தை விதிகள் நீக்கப்பட்ட பின்னர் வரைவு கொள்கை தொடர்பான அரசாணை வெளியிடப்படும்” எனத் தெரிவித்திருக்கிறார்.
சென்னை மாநகராட்சி சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள்:
சென்னை மாநகராட்சி நிர்வாகத்தால் தலைநகர் சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், வாகன பார்க்கிங் வசதிகளை மேம்படுத்தி எளிமையாக்குவதற்காக `ஸ்மார்ட் பார்க்கிங் மேலாண்மை திட்டத்தை’ செயல்படுத்தி வருகிறது. அதேபோல, நகரின் முக்கியமான இடங்களில், பொது-தனியார் பங்களிப்பு (PPP) திட்டத்தின் மூலம் மல்டி லெவல் பார்க்கிங் வசதிகளையும் ஏற்படுத்திவருகிறது. முதல்கட்டமாக, சென்னை தி.நகரில் ஒரே நேரத்தில் 222 கார்களை நிறுத்தும் வகையில் மல்டி லெவல் கார் பார்க்கிங் வசதி ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. தற்போது, சாதாரண சாலைகளில் கார் பார்க்கிங்கிற்கு ரூ.20, பிரீமியம் சாலைகளில் ரூ.40-ம் வசூலிக்கப்படுகிறது. மேலும், நிர்ணயிக்கப்பட்டதைவிட அதிக கட்டணம் வசூல் தொடர்பான புகார்களை சென்னை மாநகராட்சி ஹெல்ப்லைன் 1913 என்ற எண்ணிற்கு தொடர்புகொண்டு தெரிவிக்கலாம் என்றும் மாநகராட்சி அறிவுறுத்தியிருக்கிறது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/3PaAEiY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3PaAEiY