மதுரை: தமிழக நெடுஞ்சாலைத்துறை மறு சீரமைப்பு செய்யப்பட உள்ள நிலையில், இதில் ஓய்வு பெற்றவர்களை மீண்டும் பணி நியமனம் செய்ய அரசு முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.
தமிழகத்தில் மாநில நெடுஞ்சாலைத்துறை, 1946ம் ஆண்டிலே உருவாக்கப்பட்ட பெருமைக்குரியது. சாலைகளை பராமரித்தல், மேம்படுத்ததல் மற்றும் ஊரகப்பகுதிகளுக்கு சாலைகளை வசதிகளை ஏற்படுத்துதல் போன்ற முக்கிய நோக்கத்தை அடிப்படையாக கொண்டு இந்த துறை செயல்படுகிறது.
நெடுஞ்சாலைத்துறை மாநிலம் முழுவதும் 70,566 கி.மீ., சாலைகளை பராமரித்து வருகிறது. இப்பணிகளை மேற்கொள்ள நெடுஞ்சாலைத்துறையில் தற்போது 10 தலைமை பொறியாளர் பணியிடங்கள் உள்ளன. சாலைகள் தவிர, கட்டுமானம், பராமரிப்பு போன்றவற்றையும் இத்துறை நிர்வகிக்கிறது. மொத்தம் 9 மண்டலங்கள் உள்ளன. இத்துறைகளின் கீழ் தேசிய நெடுஞ்சாலைகள், நபார்டு மற்றும் கிராம சாலைகள், திட்டங்கள் மற்றும் நெடுஞ்சாலைத்துறை மண்டல தர ஆய்வங்கள் போன்றவையும் உள்ளன.
இந்நிலையில் மாநில நெடுஞ்சாலைத்துறையை மறுசீரமைப்பதாக கூறி, தனித்தனியாக செயல்படக்கூடிய நபார்டு, கிராம சாலைகள், திட்டம், கட்டுமானம் மற்றும் பராமரிப்பு ஆகியவற்றை நெடுஞ்சாலைத்துறையுடன் இணைக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மறுசீரமைப்பில் ஓய்வு பெற்றவர்களுக்கு மீண்டும் பணிபுரிய வாய்ப்பு கொடுப்பதற்கு தமிழக அரசு முடிவு செய்து இருப்பதாக கூறப்படுவதால் அதற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அரசின் இந்த நடவடிக்கை, இளைஞர்கள் வேலைவாய்ப்பை பறிக்கும் என நெடுஞ்சாலைத்துறையினர் கவலை தெரிவிக்கிறார்கள்.
இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறையினர் கூறுகையில், ‘‘10 தலைமை பொறியாளர் கட்டுப்பாட்டில் உள்ள இத்துறை நிர்வாகத்தை ஒரே ஒரு தலைமை பொறியாளர் கீழ் சென்னையில் இருந்து இயக்கும் வகையில் கொண்டு வர மறுசீரமைப்பில் முடிவு செய்து உள்ளனர். இவர்கள் தவிர 3, 4 தலைமை பொறியாளர்கள் இருப்பார்கள். அவர்கள் வெவ்வெறு நிர்வாகத்தை கவணிக்கும் வகையில் செயல்பட உள்ளதாக கூறப்படுகிறது.
திருச்சி, கோவை, திருண்வண்ணாமலை, மதுரை ஆகிய இடங்களில் மட்டும் மண்டல அலுவலங்கள் அமைத்து அதற்கு தலைமை பொறியாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர். இந்த மறுசீரமைப்பு, ஓய்வு பெற்றவர்களை மீண்டும் பணிக்கு கொண்டு வருவதற்கான வடிவமாகவே உள்ளது.
தற்போது தலைமை பொறியாளர் முதல் அலுவலக உதவியாளர்கள் வரை நெடுஞ்சாலைத்துறையில் 6,320 பணியாளர்கள் எண்ணிக்கையில் உள்ளன. இவர்கள் இல்லாமல், திட்டம் சார்ந்த பணியாளர்களாக சாலை பணியாளர்கள் 10 ஆயிரம் பேர், சாலை ஆய்வாளர்கள் 2 ஆயிரம் பேர் உள்ளனர். மொத்தம் 18 ஆயிரம் பணியாளர்கள் இத்துறையில் பணிபுரிகிறார்கள். 3 ஆயிரம் காலிப்பணியிடங்கள் உள்ளன.
தேசியநெடுஞ்சாலை ஆணையம் போல் தமிழ்நாடு அரசும் மாநில நெடுஞ்சாலை ஆணையத்தை உருவாக்க ஏற்கெனவே முடிவு செய்துள்ளது. மேலும், தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையம் சாலைகளை போல், மாநில சாலைகளிலும் கட்டணம் டோல்கேட்டுகளை அமைக்கும் திட்டமும் எதிர்காலத்தில் உள்ளது.
தற்போது இந்து அறநிலைத்துறை, சிப்காட் துறைகளை போல், நெடுஞ்சாலைத்துறையிலும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதற்கு பதிலாக ஓய்வு பெற்றவர்களை மீண்டும் அதே பணியில் நியமிக்க கூடிய நடவடிக்கைகள் சாதாரணமாக நடந்து வருகிறது. இதனை தமிழக முதல்வர் உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும்.
மத்திய அரசை பார்த்து கேள்வி கொடுக்க கூடிய முதலமைச்சர், தனது நிர்வாகத்தின் கீழ் வரக்கூடிய ஒரு துறையில் ஓய்வு பெற்றவர்களை நியமிப்பது சரியா? என்ற கேள்வி எழுந்துள்ளது. ஓய்வு பெற்றவர்கள் அரசு பணியில் இருக்கும் போது அவர்கள் தவறு செய்தாலும் அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது. இவர்கள் ஓய்வு பெற்ற பிறகும் பணியாற்றினால் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு பறிப்போகிறது. தமிழக அரசு இந்த நடவடிக்கை கைவிடவில்லை என்றால், எதிர்காலத்தில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு 80 சதவீதம் கூட இருக்காது’’ என்றனர்.