சென்னை: பெங்களூரு குண்டுவெடிப்பு சம்பவத்தில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியை சென்னைக்கு அழைத்து வந்து என்ஐஏ அதிகாரிகள் நேற்று விசாரணை நடத்தினர். குற்றவாளி தங்கியிருந்த விடுதி, பாழடைந்த கட்டிடம் உள்ளிட்டவற்றில் அதிகாரிகள் சோதனையும் நடத்தினர்.
பெங்களூருவில் உள்ள ‘ராமேஸ்வரம் கஃபே’ உணவகத்தில் கடந்த மார்ச் 1-ம் தேதி குண்டு வெடித்ததில் 10 பேர் காயமடைந்தனர். இந்த குண்டு வெடிப்பு சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுகுறித்து தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள், பெங்களூரு மத்திய குற்றப்பிரிவு போலீஸாருடன் இணைந்து விசாரணை நடத்தி வருகின்றனர். சிசிடிவி கேமரா பதிவு மூலம் முக்கிய குற்றவாளி அடையாளம் காணப்பட்டார். மேலும், குண்டுவெடிப்பு நடந்த இடத்தில் இருந்து 2 கி.மீ. தூரத்தில் உள்ள கழிப்பிடத்தில் குற்றவாளி தனது தொப்பியை வீசியதும், சென்னையில் உள்ள வணிக வளாகத்தில் அந்த தொப்பி வாங்கப்பட்டதும் தெரியவந்தது. அதனடிப்படையில், கர்நாடகா, தமிழகம், உத்தர பிரதேசத்தில் 18 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தினர். இங்கு கிடைத்த முக்கிய தகவலின்படி, கர்நாடக மாநிலம் மங்களூருவில் கடந்த 2022-ம் ஆண்டு குக்கர் குண்டுவெடிப்பு வழக்கில் தொடர்புடைய அம்மாநிலத்தின் சிவமொக்கா மாவட்டம் தீர்த்தஹள்ளியைச் சேர்ந்த முசாவீர் சாஹிப், அப்துல் மதீன் தாஹா ஆகிய 2 பேர்தான் குண்டு வெடிப்புக்கான காரணம் என்பது தெரியவந்தது.
பயங்கரவாத அமைப்பின் ஆதரவாளர்களான, இவர்கள் 2 பேர் பற்றி துப்பு கொடுத்தால் ரூ.10 லட்சம் பரிசு வழங்கப்படும் என்றும் என்ஐஏ அதிகாரிகள் அறிவித்திருந்தனர். இந்நிலையில் மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள விடுதியில் தங்கியிருந்த அவர்கள் 2 பேரும், கடந்த ஏப்.12-ம் தேதி அதிரடியாக கைது செய்யப்பட்டனர். இவர்கள் 2 பேரும் சென்னை திருவல்லிக்கேணி பகுதியில் உள்ள விடுதியில் தங்கி, ராமேஸ்வரம் கஃபே உணவகத்தில் குண்டு வைப்பதற்கான சதித் திட்டத்தை தீட்டியது விசாரணையில் தெரியவந்தது.
இந்த வழக்கில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்வதற்கு ஆதாரங்களை சேகரிக்கும் வகையில் என்ஐஏ அதிகாரிகள் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர். இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் மூளையாக செயல்பட்ட அப்துல் மதீன் தாஹாவை என்ஐஏ அதிகாரிகள் பெங்களூருவில் இருந்து நேற்று சென்னைக்கு அழைத்து வந்தனர். திருவல்லிக்கேணியில் அவர் தங்கி இருந்த விடுதிக்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.
மேலும், விடுதி மேலாளரிடம் அப்துல் தங்கியிருந்தபோது, அவர் அறைக்கு வந்தவர்களை அடையாளம் காட்ட முடியுமா என விசாரித்தனர்.
தொடர்ந்து, சிசிடிவி காட்சிகளையும் பார்வையிட்டனர். அப்போது அப்துல் மதீன் தாஹா, தான் அணிந்திருந்த சிவப்பு நிற சட்டை மற்றும் சில உடைமைகளை அருகில் உள்ள பாழடைந்த கட்டிடத்தில் வைத்திருப்பதாக அதிகாரிகளிடம் கூறியதாகத் தெரிகிறது. அதன்பேரில் அவரை அந்த கட்டிடத்துக்கு அழைத்துச் சென்று, அங்கு வெடிபொருட்கள் வைத்திருந்ததற்கான தடயங்கள் இருக்கிறதா என அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இவ்வாறு சென்னையில் நேற்று பிற்பகல் 1.30 மணி முதல் மாலை 4 மணி வரை விசாரணை நடத்தப்பட்டு, பின்னர் அப்துல் மதீன் தாஹா மீண்டும் பெங்களூரு அழைத்துச் செல்லப்பட்டார்.