தன்ராஜ் இயக்கத்தில், சமுத்திரக்கனி நடிப்பில் வெளியாகவுள்ள படம் ‘ராமம் ராகவம்’.
தமிழ், தெலுங்கு மொழிகளில் உருவாகி இருக்கும் இந்தத் திரைப்படம் அப்பா மகன் உறவை அடிப்படையாகக் கொண்ட கதைக்களமாகத் தயாராகியுள்ளது. அருண் சிலுவேரு இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார். ஹரிஷ் உத்தமன், பிருத்விராஜ், சத்யா, மோக்ஷா சென்குப்தா, பிரமோதினி உட்பட பலர் நடித்துள்ள இப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் இயக்குநர் பாலா, நடிகர்கள் சூரி, தம்பி ராமையா, பாபி சிம்ஹா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். அப்போது சமுத்திரக்கனி குறித்துப் பேசிய பாலா, “சமுத்திரக்கனியோட மாபெரும் ரசிகனாக நான் இங்கு வந்திருக்கிறேன். நடிப்பிலும் தேசிய விருது வாங்கி, இயக்கத்திலும் நிறைய படங்கள் பண்ணி தன்னை நிரூபித்துக் காட்டிவிட்டார். அதைத் தாண்டி அவருடைய கடுமையான உழைப்புக்கு ரசிகன்.
ஒரு நாளைக்கு அரை மணிநேரம் கூட வீணடிக்க மாட்டார். அதே போல் மற்றவர்களுக்கு உதவி செய்வதிலும் அவருக்கு இருக்கின்ற மனது பெரியது. அதை நிறைய இடங்களில் பார்த்திருக்கிறேன். அவர் நடிக்கின்ற படமாகட்டும் அல்லது அவருக்கு பிடித்த அப்பா மாதிரியான படமாகட்டும் அதை ஊக்குவிப்பதில் அவருக்கு பெரிய மனது இருக்கிறது.

இது போன்ற குணம் மட்டும் அவரிடம் தொடர்ந்து இருந்தால் அவரால் இன்னும் ஆயிரம் பேர் பிழைப்பார்கள். அதை அவர் விட்டுவிடக்கூடாது” என்று நெகிழ்ச்சியாகக் கூறியிருக்கிறார்.