தன்ராஜ் இயக்கத்தில், சமுத்திரக்கனி நடிப்பில் வெளியாகவுள்ள படம் ‘ராமம் ராகவம்’.
தமிழ், தெலுங்கு மொழிகளில் உருவாகி இருக்கும் இந்தத் திரைப்படம் அப்பா மகன் உறவை அடிப்படையாகக் கொண்ட கதைக்களமாகத் தயாராகியுள்ளது. அருண் சிலுவேரு இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார். இப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா சென்னையில் இன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் இயக்குநர் பாலா, நடிகர்கள் சூரி, தம்பி ராமையா, பாபி சிம்ஹா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

அப்போது பேசிய சமுத்திரக்கனி, “அப்பா என்றாலே எனக்குள் ஒரு வேதியியல் மாற்றம் நடந்து விடும். அப்பாவாக இதுவரை பல கதைகளில் நடித்திருக்கிறேன். இந்தப் படத்திலும் அப்பாவாக நடித்திருக்கிறேன். அப்பாவாக 10 படத்தில் நடித்திருந்தாலும் ஒவ்வொரு கதாபாத்திரமும் வெவ்வேறு மாதிரி இருக்கும். ஒருமுறை கூட அப்பா கதாபாத்திரத்தில் நடிக்கக்கூடாது என்று நினைத்ததே இல்லை. புரிந்துகொள்ளவே முடியாத பந்தம் அப்பா – மகன் உறவு தான்.
‘ராமம் ராகவம்’ படம் மக்களிடம் போய் சேர வேண்டும். ஏனென்றால் ஒவ்வொரு முறையும், சிறிய படங்களை எடுத்துவிட்டு அதனை மக்களிடம் கொண்டு போய் சேர்க்க போராட வேண்டி இருக்கிறது. ‘அப்பா’ என ஒரு படம் எடுத்தேன். இன்றுவரை அது என்ன ஆனது என்பது குறித்த கணக்கே எனக்கு வரவில்லை. இப்படித்தான் இன்றைய சூழல் இருக்கிறது.

அதன்பிறகு எனக்கு படம் எடுக்கவே தோணவில்லை. பேரன்புடன் படத்தை எடுத்துவிடுகிறோம். அதைக் கொண்டு போய் சேர்க்கும்போது மகிழ்ச்சியே இருபதில்லை. அதற்கான வழியும் தெரியவில்லை” என்று ஆதங்கத்துடன் பேசியிருக்கிறார்.