சென்னை மற்றும் ஹைதராபாத் அணிகளுக்கிடையேயான போட்டி சேப்பாக்கத்தில் நடந்து வருகிறது. முதலில் பேட் செய்த சென்னை அணி 212 ரன்களை அடித்திருந்தது. இந்தப் போட்டியில் துபே 20 பந்துகளில் 39 ரன்களை அடித்திருந்தார். இதில் 4 சிக்சர்களும் அடக்கம். பெரிய பெரிய சிக்சர்களை சிவம் துபே ஒவ்வொரு போட்டியிலும் அநாயசமாக அடித்து வருகிறார். இதனாலயே ரசிகர்கள் இவரை ‘ஆறுச்சாமி’ ‘சிக்சர் மணி’ என செல்லமாக அழைத்து வருகின்றனர். இந்நிலையில், சென்னை அணியின் பேட்டிங் பயிற்சியாளரான மைக் ஹஸ்ஸி சிவம் துபேவின் சக்சஸ் சீக்ரெட் குறித்து பேசியிருக்கிறார்.
மைக் ஹஸ்ஸி பேசியதாவது, ‘துபேவுடன் பணியாற்றுவது மகிழ்ச்சியான விஷயமே. நாங்கள் அவரின் கால் நகர்த்தல்களை (Foot Work) பற்றி பேசுவதே இல்லை. அவர் மனரீதியாக எந்தக் குழப்பமும் இல்லாமல் தெளிவாக இருப்பதை நாங்கள் உறுதி செய்கிறோம். எதைப் பற்றியும் பெரிதாக யோசிக்காமல் ஆடும்போதுதான் அவர் சிறப்பாக ஆடுகிறார். அதாவது,
அவரின் டெக்னிக்குகள் பற்றியோ மற்ற விஷயங்கள் பற்றியோ அதிகம் சிந்திக்காமல் தெளிவாக இருக்கும்போதுதான் அவர் நன்றாக ஆடுகிறார். அவருக்கென பிரத்யேகமாக பந்தை அடிக்கும் திறன் இருக்கிறது.
நீண்ட கைகளையும் புஜங்களையும் கொண்டிருக்கிறார். தடுமாற்றமின்றி நிலையாக நின்று கையை வீசி ஆடினால் அவரால் பந்தை எல்லைக்கோட்டை தாண்டி அடிக்க முடிகிறது. பௌலர்களை ஆதிக்கமாக எதிர்கொண்டு பவுண்டரிகளை அடிக்கும் சுதந்திரத்தை அவருக்கு கொடுத்திருக்கிறோம். ஒரு சில சமயங்களில் அவரால் இதை செய்ய முடியாமல் சொதப்பினாலும் பரவாயில்லை. அவர் இப்படித்தான் ஆட வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம். பயிற்சியாளர்களும் கேப்டனும் அவரிடம் இந்த விஷயத்தைதான் உறுதியாக சொல்லியிருக்கிறோம். .
கடந்த சீசனில் தோனியும் அதையேதான் துபேவிடம் சொல்லியிருந்தார். எந்த அழுத்தமும் இல்லாமல் இயல்பாக சுதந்திரமாக ஆடுவதுதான் துபேவுக்கும் பெரும் நம்பிக்கையைக் கொடுக்கிறது.’ என்றார்.
சிவம் துபேவின் வெற்றி ரகசியம் என நீங்கள் நினைப்பதை கமெண்ட் செய்யுங்கள்.