இங்கிலாந்து நாட்டின் சவுத் வேல் பகுதியில் வசிக்கும் தம்பதியினர், 5 உணவகங்களில் சுமார் 1,000 பவுண்டுகள் (தோராயமாக ரூ.1,04,170.50) மதிப்பிலான உணவைச் சாப்பிட்டுவிட்டு கட்டணம் செலுத்தாமல் ஏமாற்றி வந்துள்ளனர். அத்தோடு உயர்தர உணவகங்களுக்குச் சென்று அதிக அளவிலான, விலையுயர்ந்த உணவுகளை ஆர்டர் செய்து சாப்பிடுவதை தங்களுடைய வழக்கமாக வைத்துள்ளனர். குறிப்பாகப் பிரிட்டனில் 5 பிரபலமான உணவகங்களில் சாப்பிட்ட பிறகு, பணம் தராமல் ஏமாற்றிவிட்டு, அந்த உணவகங்களிலிருந்து வெளியேறியுள்ளனர்.
இந்த நிலையில் பாதிக்கப்பட்ட உணவக தரப்பினர் அளித்த புகாரின் பேரில், உள்ளூர் போலீஸார் சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து விசாரணை மேற்கொண்டதில், இத்தகைய செயலில் ஈடுபட்டு வந்தது, சாண்ட்ஃபீல்ட்ஸைச் சேர்ந்த 39 வயதான ஆன் மெக்டொனாக் மற்றும் அவரது கணவரான 41 வயதான பெர்னார்ட் மெக்டொனாக் என்பது தெரியவந்தது. அதையடுத்து தம்பதியைப் பிடிக்க போலீஸார் தனிக் குழு ஒன்றை அமைத்து, தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். பின்னர் தம்பதி கைதுசெய்யப்பட்டனர்.
கைதுசெய்யப்பட்ட பிறகு போலீஸார் அவர்களிடம் விசாரணை நடத்தினர். அதில் தம்பதி குடும்பமாகச் சென்று பல்வேறு உணவகங்களில் சாப்பிட்டுவிட்டு, விதவிதமாக ஏமாற்றிவிட்டு பணம் செலுத்தாமல் ஏமாற்றியது தெரியவந்தது. அண்மையில்கூட, பெல்லா சியாவோ ஸ்வான்சீ என்ற சிசிலியன் உணவகத்தில் இந்தத் தம்பதி தங்கள் பிள்ளைகளுடன் சென்று சாப்பிட்டுவிட்டு £-329 (தோராயமாக ₹ 34,000) கட்டணம் செலுத்தாமல், விரைவாக உணவகத்தை விட்டு வெளியேறிச் சென்றிருக்கின்றனர். இது தொடர்பான சிசிடிவி காட்சிகளை உணவக ஊழியர்கள் வெளியிடவே, அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. அதைத் தொடர்ந்தே இந்தத் தம்பதி தொடர்பான பேச்சு பரவலாக எழுந்தது. தற்போது கைதும் செய்யப்பட்டிருக்கின்றனர்.
இவர்கள் குறித்து பேசும் போலீஸார், “இந்தத் தம்பதி குடும்பமாகச் சென்று சாப்பிட்டுவிட்டு, நூதனமாக உணவக ஊழியர்களை ஏமாற்றிவிட்டு, தப்பிச் செல்வதை வாடிக்கையாக வைத்திருந்திருக்கின்றனர். அதிலும் அந்தப் பெண், உணவருந்திவிட்டு, தனது சேமிப்பு கணக்கு அட்டை (கார்டு) மூலம் பணம் செலுத்த முயலும்போது Decline ஆவதால், பின்னர் அவர் தன்னுடைய காரில் இருக்கும் மற்றொரு கார்டை கொண்டு வருவதாகக் கூறி வெளியே செல்லும்போது, அவரது மகன் உள்ளே காத்திருப்பார் என்றும், பின்னர் மகனும் தொலைபேசியில் அவசர அழைப்பு வருவதாகவும், அந்த அழைப்பைப் பேசிவிட்டு வருவதாகவும் கூறி உணவகத்தை விட்டுத் தப்பியோடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கின்றனர்.
அத்தோடு போலீஸில் சிக்காமல் இருக்க, ஹோட்டல்களில் அறையெடுக்கும்போது போலியான எண்ணைக் கொண்டு முன்பதிவு செய்து வந்திருக்கின்றனர். இவர்கள் பல உணவகங்களில் இப்படிச் சாப்பிட்டுவிட்டு ஏமாற்றிச் சென்றிருக்கின்றனர். ஆனால், எங்களுக்குக் கிடைக்கப்பெற்ற புகார்களின்படி பார்க்கையில், சுமார் 1,000 பவுண்டுகள் (தோராயமாக ரூ.1,04,170.50) மதிப்பிலான உணவைச் சாப்பிட்டுவிட்டு, பில் செலுத்தாமல் ஏமாற்றி மோசடியில் ஈடுபட்டிருக்கின்றனர். தற்போது கைதுசெய்யப்பட்டிருக்கும் தம்பதி இருவரும், போலீஸ் காவலில் இருக்கின்றனர்” எனத் தெரிவிக்கின்றனர்.