`தனியார் கார்கள் பைக்குகள் உள்ளிட்ட வாகனங்களின் நம்பர் பிளேட்டில் ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டிருந்தால், வரும் மே 2-ம் தேதி முதல், கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று சென்னை பெருநகர போக்குவரத்துக் காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
தனியார் வாகனங்களில் அரசால் அங்கீகரிக்கப்படாத நம்பர் பிளேட்களை மாட்ட தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், அங்கீகரிக்கப்படாத ஸ்டிக்கர்களை ஒட்டியிருக்கும் வாகனங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை அறிவித்துள்ளது.
சிலர் தங்களுடைய வாகனங்களில் போலீஸ், வக்கீல், மீடியா, பிரஸ், அட்வகேட், டாக்டர், தலைமைச் செயலகம் மற்றும் ராணுவம் என்று பணிகள், பதவிகளைக் குறிப்பிட்டு ஸ்டிக்கர்களை ஒட்டிக்கொள்கின்றனர். மேலும், அரசியல் கட்சி உறுப்பினர்கள் தங்கள் பங்குக்கு கட்சி சின்னங்களை ஸ்டிக்கர்களாக ஓட்டுகின்றனர். இதுதவிர, சிலர் தங்களுடைய சாதிச் சங்கங்களின் சின்னங்கள், பெயர்களைக் குறிப்பிட்டு ஸ்டிக்கர்களை ஒட்டிக்கொள்கின்றனர்.
இது போன்ற ஸ்டிக்கர்கள் நம்பர் பிளேட்டிலும், வாகனத்தின் முன்புறம், பின்புறத்திலும் இருப்பது வழக்கம். பெரும்பாலும், சென்னை பெருநகரில் உள்ள தனியார் வாகனங்களில் இதை அதிகமாகக் காணலாம்.
சாலை விதிகளை மீறும்போது, காவல்துறையின் நடவடிக்கையில் இருந்து தப்பிக்கவே இந்த முரண்பாடான செயலை செய்கின்றனர் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இத்தகைய அரசாங்கத் தொடர்புடைய சின்னங்கள்/எழுத்துகளை தனியார் வாகனங்களில் வெளிப்படுத்துவது அதன் இயக்கம் மற்றும் பாதுகாப்பை சமரசம் செய்கிறது.
குற்றம் சாட்டப்பட்டவர்களும் வாகனத்தில் இத்தகைய ஸ்டிக்கர்களை தவறாகப் பயன்படுத்தி, காவல்துறையின் கடுமையான நடவடிக்கைகளில் இருந்து தப்பித்து வருகிறார்கள்.
இந்த உண்மையின் தீவிரத் தன்மையைக் கருத்தில் கொண்டு சென்னை பெருநகர போக்குவரத்துக் காவல்துறை, தனியார் வாகனங்களில் உள்ள ஸ்டிக்கர்களை நீக்க மே 1 வரை கால அவகாசம் வழங்கியுள்ளது. மேலும், “இவ்விதி மீறலில் ஈடுபடுபவர்கள் மீது வருகின்ற 02.05.2024 முதல், MV சட்டம் 1988-ன் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் மற்றும் (மோட்டார் வாகனத்தில் அங்கீகரிக்கப்படாத குறியீடு) பிரிவு 198-ன் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்படும் மற்றும் வாகன எண் தகட்டில் ஏதேனும் அங்கீகரிக்கப்படாத ஸ்டிக்கர்களை பயன்படுத்தினால் MV விதி 50 u/s 177-ன் கீழ் அபராதம் விதிக்கப்படும். அனைவரும் இதற்கு ஒத்துழைக்க வேண்டும்” என்று அறிவித்துள்ளது.
`இந்த அறிவிப்பில் இடம்பெற்றிருக்கும் வழக்கறிஞர்கள் பற்றிய குறிப்பைத் திரும்பப் பெற வேண்டும்’ என்று சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்தின் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
இது தொடர்பாக, உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்தின் தலைவர் மோகனகிருஷ்ணன், செயலாளர் கிருஷ்ணகுமார், துணைத்தலைவர் அறிவழகன் ஆகியோர் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர். அதில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் சார்பாக, வழக்கறிஞர்களுக்காக அவர்களின் பதிவு எண்ணுடன்கூடிய வழக்கறிஞர்களுக்கான ஸ்டிக்கர்கள் வழங்கப்படுகின்றன.
நடைபாதைகளில் விற்கப்படும் வழக்கறிஞர்கள் ஸ்டிக்கரை வாங்கி சிலர் தவறாகப் பயன்படுத்தலாம். அப்படிப்பட்டவர்கள் செய்வதுதான் தவறு” என்று கூறியுள்ளனர்.
“நம்பர் பிளேட்டுலதான் ஒட்டக் கூடாதா… இல்ல வண்டியில எங்கயுமே… எதையுமே ஒட்டக் கூடாதா?” என்றொரு கேள்வி பலருக்கும் தற்போது எழுந்துள்ளது.
இதற்கும் வழக்கறிஞர்களின் கூட்டறிக்கையிலேயே பதில் தரப்பட்டுள்ளது. அதாவது, “காவல்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள சட்டப் பிரிவு, குறைபாடான நம்பர் பிளேட் சம்பந்தப்பட்டது மட்டுமே. ஸ்டிக்கர்களுக்கு அது பொருந்தாது” என்று அந்த வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.
சரி, இதை அந்த அறிவிப்பிலேயே போலீஸ் தெளிவா சொல்லியிருக்கலாமே. அப்படி சொல்லிட்டா, பிறகெப்படி `சட்டம் தன் கடமை’யைச் செய்ய முடியும்?
இதையெல்லாம்விட முக்கியமானதொரு விஷயம் தெரியுமோ..? அதாவது, இப்படி ஏற்கெனவே நூத்தம்பது தடவை அறிவிப்பு வெளியிட்டிருப்பாங்க. ஆனா, ஒரு தடவைகூட உருப்படியா நடவடிக்கை எடுத்ததில்ல. இதைவிடக் கொடுமை. போலீஸ்காரங்களே `போலீஸ்’னு பெருசு பெருசா எழுதிகிட்டு அலையறதுதான். இன்னொரு கொடுமை. நம்பர் பிளேட்டே இல்லாம பலபேர் வெறுமனே போலீஸ், கட்சித் தலைவர், சாதித் தலைவர் படத்தை மட்டும் நம்பர் பிளேட்டுல வெச்சுக்கிட்டு வண்டியை ஓட்டிக்கிட்டு அலையறதுதான். அவங்க மேலயெல்லாம் நடவடிக்கை எடுத்ததே இல்ல.
ஆகக்கூடி… திடீர்னு ஓர் அதிகாரி அந்த இடத்துல வந்து உக்கார்ந்தா… இப்படியொரு அறிவிப்பு வரும். ஆனா, அதுக்குப் பிறகு, இது மாதிரி ஸ்டிக்கர்களோட அலையறவங்கள பெருசா கண்டுக்க மாட்டாங்க.
மக்கா, அதுக்காக இத நம்பி நீங்க கண்டபடி எழுதிகிட்டு அலையாதீங்க. நீங்க வண்டியை ஓட்டிக்கிட்டு போற நேரமா பார்த்து, ரோட்டுல `பொறுப்பா’ நிக்கற போலீஸ், `சட்டம் தன் கடமையைச் செய்யும்’னு மூடு வந்துட்டா… கண்டிப்பா குறுக்க கையை நீட்டி ‘கேஸு’னு கிலி கிளப்பிடுவாங்க. அதனால, நீங்க பொறுப்பான குடிமகனா… நம்பர் பிளேட்டுல எதையும் கிறுக்கி வைக்காம… நம்பர மட்டும், அதுக்கான அளவுல எழுதி வெச்சுக்கிட்டு ஓட்டுங்க. ஆமாம்… சட்டத்தையும் மதிச்ச மாதிரியும் இருக்கும்… உங்க பணத்தைப் பாதுகாத்துக்கிட்ட மாதிரியும் இருக்கும்!
பார்த்து சூதானமா நடந்துக்கோங்க… அவ்வளவுதான்!