சமூக வலைதளமான இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டு காதலித்து வந்த ஆண், பெண் இருவரில், பெண் திருமணத்திற்கு மறுக்கவும்… அவரை மண்ணெண்ணெய் ஊற்றி எரித்து கொலை செய்ய முயன்ற சம்பவம் ராஜபாளையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் குறித்து போலீஸிடம் விசாரித்தோம். அப்போது நம்மிடம் பேசிய போலீஸார், ‘விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் முத்துக்கொத்தனார் தெருவை சேர்ந்தவர்கள் பெருமாள்சாமி – ஜோதி தம்பதியினர். இந்த தம்பதியினரின் மூன்றாவது மகள் பாண்டிச்செல்வி. தனியார் ஜவுளிக்கடையில் வேலை பார்த்துவருகிறார். இவருக்கு ஏற்கனவே திருமணமாகி கணவருடன் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக தாய் வீட்டில் வசித்து வருகிறார். இந்தநிலையில், இவருக்கும் மதுரையைச் சேர்ந்த குணசேகர் என்பவருக்கும் சமூகவலைதளமான இன்ஸ்டாகிராம் மூலமாக பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம், நாளடைவில் காதலாக மாறி இருவரும் தொலைபேசி மூலமாக பேசி வந்துள்ளனர்.
அவ்வப்போது நேரிலும் சந்திப்பதையும் வழக்கமாகக் கொண்டுள்ளனர். இந்தநிலையில் கடந்த 20 தினங்களுக்கு முன்பு இருவருக்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட்டு காதலில் விரிசல் விழுந்துள்ளது. இதன்காரணமாக பாண்டிச்செல்வி, குணசேகருடன் பேசுவதை தவிர்த்து வந்துள்ளார். இதனை தாங்கிக்கொள்ள முடியாத குணசேகரன் பாண்டிச்செல்வியை சந்தித்து திருமணம் செய்ய வற்புறுத்தியதாகவும், அதற்கு பாண்டிச்செல்வி மறுப்பு தெரிவித்து வந்துள்ளார். ஒருக்கட்டத்தில், குணசேகரனின் தொந்திரவு தாங்காமல், என்னை விட்டுவிடவில்லையென்றில் காவல் நிலையத்தில் புகார் அளிப்பேன் என பாண்டிச்செல்வி கூறியதையடுத்து குணசேகரன் அங்கிருந்து கிளம்பி சென்றுள்ளார்.
இந்தநிலையில் தனது வீட்டு மாடியில், அக்கா பாண்டீஸ்வரி அவரின் மகள் ஆகியோருடன் பாண்டிச்செல்வி நின்றுகொண்டிருந்தார். அப்போது, பாண்டிச்செல்வியின் வீட்டிற்கு திடீரென வந்த குணசேகரன், தன்னை திருமணம் செய்ய வற்புறுத்தி அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதற்கு பாண்டிச்செல்வி மீண்டும் மீண்டும் மறுப்பு தெரிவித்ததையடுத்து, குணசேகரன் தான் பையில் மறைத்து கொண்டுவந்திருந்த மண்ணெண்ணெய் பாட்டிலை எடுத்து பாண்டிச்செல்வியின் மீது ஊற்றி தீப்பற்ற வைத்து விட்டு தப்பி ஓடிச் சென்றதாக கூறப்படுகிறது.
உடலில் மள, மளவென பற்றிக்கொண்ட தீயால் பாண்டிச்செல்வி அலறி துடித்தார். இதைபார்த்து அறண்டுபோன அவரின் அக்கா பாண்டீஸ்வரி உதவிக்கேட்டு சத்தம்போடவும், ஓடிவந்த அக்கம் பக்கத்தினர் பாண்டிச்செல்வி மீது பற்றி எரிந்து கொண்டிருந்த தீயை அனைத்து மீட்டனர். தொடர்ந்து ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக பாண்டிச்செல்வி அனுப்பிவைக்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், பாண்டிச்செல்விக்கு முகம், மார்பு மற்றும் கை, கால் ஆகியவற்றில் 22% தீக்காயம் ஏற்பட்டிருப்பதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து தெற்கு காவல் நிலையத்தில் பாண்டிச்செல்வி அளித்த புகாரின்பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பாண்டிச்செல்வியின் வீட்டிற்கு வந்து அவர்மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீப்பற்ற வைத்துவிட்டு குணசேகரன் தப்பி ஓடும் காட்சிகள் அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமரா காட்சிகளில் பதிவாகியுள்ளன. அதைவைத்து குணசேகரனை பிடிக்கும் முயற்சியில் போலீஸார் தீவிரம் காட்டி வருகின்றனர்” என்றனர்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3OITqxs