ஹைதராபாத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் 2022-ல் இங்கிலாந்தில் தன் காதலியின் கழுத்தில் கத்தியால் ஒன்பது முறை குத்துவதற்கு முன், `கத்தியால் ஒருவரை உடனடியாகக் கொல்வது எப்படி?’ என இணையத்தில் தேடிய சம்பவம் தற்போது வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது. இந்த சம்பவத்தைப் பொறுத்தவரை, ஸ்ரீராம் அம்பர்லா (25) என்ற இளைஞர் தற்போது குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு 16 ஆண்டுகள் சிறைத் தண்டனையுடன் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்.
இதுகுறித்து இங்கிலாந்து போலீஸாரின் கூற்றுப்படி ஸ்ரீராமும், பாதிக்கப்பட்ட சோனா பிஜுவும் (23) கடந்த 2017-ல் கல்லூரியில் சந்தித்த பிறகு பழகத் தொடங்கியிருக்கின்றனர். பின்னர், இருவரும் காதலிக்கத் தொடங்கியதையடுத்து, 2019 வாக்கில் இருவருக்குள்ளும் கருத்துவேறுபாடு காரணமாகக் காதலில் விரிசல் விழத் தொடங்கியது. அதைத்தொடர்ந்து, சோனா விலக முற்பட ஸ்ரீராம் தன்னைத் தானே காயப்படுத்தி அவரை உளவியல் ரீதியாகச் சித்ரவதை செய்யத் தொடங்கினார். ஸ்ரீராம் சில சமயங்களில் சோனாவின் வீட்டுக்கே சென்று தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு மிரட்டியதாகக் கூறப்படுகிறது. பிறகு, காதலிலிருந்து விலகிய சோனா கிழக்கு லண்டன் பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டம் பெறுவதற்காக 2022-ல் இங்கிலாந்துக்குச்சென்றார். ஸ்ரீராமும் அதே பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டம் பெற இங்கிலாந்து சென்றார். அங்கும் சேனாவைத் துன்புறுத்துவதை ஸ்ரீராம் நிறுத்தவில்லை.
பகுதிநேரமாக சோனா வேலைபார்த்துவந்த ஹோட்டலுக்கு போன் செய்வது, அவர் வருவார் என வீட்டுக்கு சாப்பாடு ஆர்டர் செய்வது என அவரை ஸ்ரீராம் பின்தொடர்ந்துகொண்டே இருந்தார். பின்னர் ஒருநாள் சோனா வேலைபார்க்கும் ஹோட்டலுக்கு நேராகவே ஸ்ரீராம் சென்றுவிட்டார். அங்கு மற்ற கஸ்டமர்களைப் போலவே ஸ்ரீராமையும் சோனா கவனித்தார். அப்போது, சோனாவிடம் `என்னைத் திருமணம் செய்துகொள், இல்லையென்றால் கொன்றுவிடுவேன்’ என ஸ்ரீராம் மிரட்டியிருக்கிறார்.
அதற்கு, சோனா மறுப்பு தெரிவித்ததால் ஆத்திரமடைந்த ஸ்ரீராம் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து அவரின் கழுத்தில் ஒன்பது முறை சாராமரியாகக் குத்தினார். இருப்பினும், இந்தக் கொடூரத் தாக்குதலிலிருந்து சோனா அதிர்ஷ்டவசமாக உயிர்பிழைத்தார். அதேசமயம், சுமார் ஒருமாத காலம் மருத்துவமனையில் அவர் தீவிர சிகிச்சையில் இருக்க நேர்ந்தது. இதற்கிடையில் இங்கிலாந்து போலீஸாரால் ஸ்ரீராம் கைதுசெய்யப்பட்டார்.
இந்த நிலையில், நீதிமன்ற விசாரணையில் ஸ்ரீராமின் ஆன்லைன் சர்ச் ஹிஸ்டரியை ( online search history) பார்த்தபோது, `வெளிநாட்டவர் ஒருவர் இங்கிலாந்தில் ஒருவரைக் கொன்றால் என்ன நடக்கும், கத்தியால் ஒருவரைக் கொல்வது எவ்வளவு எளிது, ஒருவரைக் கத்தியால் உடனடியாகக் கொல்வது எப்படி’ என அவர் தேடியிருப்பது தெரியவந்தது. இறுதியில் ஸ்ரீராம் தற்போது குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு, 16 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு சிறையிலடைக்கப்பட்டிருக்கிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3OITqxs