சென்னை: ஓய்வு எடுப்பதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது குடும்பத்தோடு கொடைக்கானலுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். கொடைக்கானலில் உள்ள தனியார் ஹோட்டலில் முதல்வர் குடும்பம் 5 நாட்கள் தங்க உள்ளனர் என்று தகவல் வெளியாகியுள்ளது.
மக்களவைத் தேர்தல் காரணமாக தீவிர பிரச்சாரம் மேற்கொண்ட முதல்வர் ஸ்டாலின், கடந்த சில நாட்களாக திமுகவினர் மற்றும் கூட்டணி கட்சியினர் உட்பட தேர்தலில் பணியாற்றியவர்களை சந்தித்து நன்றி தெரிவித்தார். இந்நிலையில் ஓய்வு எடுப்பதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது குடும்பத்தோடு கொடைக்கானலுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.
5 நாள் பயணமாக தனது குடும்பத்துடன் கொடைக்கானலில் ஓய்வுக்காகச் சென்றுள்ளார் முதல்வர் ஸ்டாலின். அவரின் மனைவி துர்கா ஸ்டாலின் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்கள் இன்று சென்னை விமான நிலையத்தில் இருந்து தனி விமானத்தில் மதுரைக்கு புறப்பட்டனர். மதுரையில் இருந்து கார் மூலமாக கொடைக்கானல் செல்லும் அவர்கள் அங்கு தனியார் விடுதியில் தங்கி ஓய்வெடுக்க உள்ளனர்.
மே 3-ம் தேதி வெள்ளிக்கிழமை வரை அங்கு ஓய்வுவெடுக்கும் அவர்கள், மே 4-ம் தேதி சனிக்கிழமையே மீண்டும் சென்னை திரும்ப உள்ளனர் என்று தகவல் வெளியாகியுள்ளது. முதல்வரின் கொடைக்கானல் வருகையையொட்டி அங்கு ட்ரோன் பறக்கத் தடை உள்ளிட்ட சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
கடந்த 2021-ல் சட்டப்பேரவைத் தேர்தல் முடிவடைந்ததும் ஸ்டாலின் குடும்பத்துடன் கொடைக்கானல் வந்து தங்கி ஓய்வெடுத்தது குறிப்பிடத்தக்கது. மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது மீண்டும் ஓய்வெடுக்கச் சென்றுள்ளார். ஓய்வுக்காக செல்வதால், கட்சியினர் யாரும் முதல்வரை சந்திக்க அனுமதி இல்லை.