கோவை: கோடை வெயிலை சமாளிக்கவும், மக்களுக்கு குடிநீர் வழங்கவும் மாநகரின் 100 இடங்களில் குடிநீர் தொட்டிகளை கோவை மாநகராட்சி அமைத்துள்ளது.
கோவையில் கடந்த சில நாட்களாக பகல் நேரங்களில் கடுமையான வெப்பம் நிலவி வருகிறது. இதற்கு முன்பு இல்லாத வகையில், கோவையில் கோடை வெயில் கொளுத்தி வருவதால் பொதுமக்கள் கடும் சிரமத்துக்குள்ளாகியுள்ளனர். பகல் நேரங்களில் வெளியே செல்வதை முடிந்தவரையில் தவிர்த்து வருகின்றனர்.
மாவட்ட நிர்வாகத்தின் சார்பில், கோடை வெயிலை சமாளிக்க தேவையான அறிவுரைகளை மருத்துவத்துறையினர் மூலம் அறிவித்துள்ளனர். மேலும், பகல் 12 மணியில் இருந்து மதியம் 3 மணி வரை அனல் காற்று வீசுவதால் அத்தியாவசிய காரணங்களின்றி வெளியே செல்லக்கூடாது என அறிவுறுத்தியுள்ளனர்.
திமுக, அதிமுக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினர் சார்பிலும், தன்னார்வல அமைப்புகள் சார்பிலும் மாநகரின் பல்வேறு இடங்களில் நீர் மோர் பந்தலை திறந்து பொதுமக்களுக்கு இலவசமாக நீர் மோரை வழங்கி வருகின்றனர்.
அந்த சாலைகளில் செல்லும் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் தகிக்கும் வெயிலில் இருந்து தப்பிக்க நீர் மோரை வாங்கி பருகி தங்களை ஆசுவாசப்படுத்திக் கொள்கின்றனர். அதேபோல், நீர் மோருடன் பழங்களும் மக்களுக்கு வழங்கப்படுகிறது.
இதற்கிடையே, மாநகராட்சி நிர்வாகத்தினர் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் கோடை காலத்தில் பொது இடங்களில் குடிநீர் தொட்டிகள் அமைக்கப்பட்டு, மக்களுக்கு குடிநீர் வழங்கப்படும். அதன்படி, நடப்பாண்டும் கோடைக்காலத்தை முன்னிட்டு, மாநகராட்சி சார்பில் பொது இடங்களில் குடிநீர் தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த தொட்டிகள் ஒவ்வொன்றும் ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்டதாகும். தினமும் இதில் தண்ணீர் நிரப்பப்படுகிறது.
இதுகுறித்து மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன் கூறும்போது, “கோவை மாநகராட்சி நிர்வாகத்தில் கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு, மத்தியம் என ஐந்து மண்டலங்கள் உள்ளன. மண்டலத்துக்கு 20 இடங்கள் என மாநகரில் 100 இடங்களில் மாநகராட்சி சார்பில் குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மக்களுக்கு இலவசமாக குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது.
மக்கள் போக்குவரத்து அதிகம் உள்ள பகுதிகள், பேருந்து நிலையங்கள், முக்கிய சிக்னல் சந்திப்புப் பகுதிகளை மையப்படுத்தி இந்த தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளன. அருகே டம்ளரும் வைக்கப்பட்டுள்ளது. வெயிலை சமாளிக்க இக்குடிநீரை மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். அதேபோல், மாநகரின் பல்வேறு இடங்களில் சாலையோரப் பகுதிகளில் மாநகராட்சி சார்பில் டெண்ட் அமைக்கப்பட்டு வருகிறது.
வெயில் நேரத்தில் சாலைகளில் செல்லும் மக்கள் தங்களை சிறிது ஆசுவாசப்படுத்திக்கொள்ளும் வகையில் இந்த டெண்ட் அமைக்கப்பட்டுள்ளது. இதில் இருக்கைகள், குடிநீர் உள்ளிட்ட வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. இது பொதுமக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்” என்றார்.