கர்நாடக மாநிலத்தில், இந்தியாவின் முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும், குமாரசமி தலைமையிலான ஜே.டி(எஸ்) கட்சியின் முக்கிய பிரமுகருமான பிரஜ்வல் ரேவண்ணாவின் பாலியல் வீடியோக்கள் தற்போது பெரும் அரசியல் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இது தொடர்பாக மாநில மகளிர் குழுவின் தலைவி நாகலட்சுமி சவுத்ரி, கர்நாடக முதல்வர் சித்தராமையாவுக்குக் கடிதம் எழுதியதன் அடிப்படையில், சிறப்பு புலனாய்வு குழுவை கர்நாடக அரசு அமைத்து விசாரணையை தொடங்கியிருக்கிறது.
இந்த நிலையில், பா.ஜ.க-வுடன் கூட்டணியில் இருக்கும் ஜே.டி(எஸ்) கட்சியின் தலைவரின் இந்த வீடியோ விவகாரம் தொடர்பாக 2023 டிசம்பர் மாதமே கர்நாடக பா.ஜ.க தலைமைக்கு ஒருவர் எழுதிய கடிதம், தற்போது இந்த விவகாரத்தை அனல்பறக்க வைத்திருக்கிறது.
டிசம்பர் 8, 2023 தேதியிட்ட அந்த கடிதத்தை பா.ஜ.க மாநிலத் தலைவர் பி.ஒய்.விஜயேந்திராவுக்கு, 2023 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்ட பா.ஜ.க வேட்பாளர் தேவராஜே கவுடா என்பவர் எழுதியிருக்கிறார்.
அதில், “பிரஜ்வல் ரேவண்ணா உட்பட ஹெச்.டி.தேவ கவுடா குடும்பத்தின் பல தலைவர்கள்மீது கடுமையான பாலியல் குற்றச்சாட்டுகள் உள்ளன. அது தொடர்பாக 2,976 வீடியோக்கள் அடங்கிய பென் டிரைவ் என்னிடம் இருக்கிறது. அதில் இடம்பெற்றுள்ளவர்களில் சில பெண்கள் அரசு அதிகாரிகள். அந்த வீடியோக்கள் எல்லாம் அந்தப் பெண்களை திரும்ப திரும்ப பாலியல் வன்கொடுமை செய்வதற்கு மிரட்ட பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.
இந்த வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் அடங்கிய மற்றொரு பென் டிரைவ் காங்கிரஸின் தேசிய தலைவர்களை சென்றடைந்திருப்பதாக தகவல் கிடைத்திருக்கிறது. நாம் ஜே.டி(எஸ்) உடன் கூட்டணி வைத்து, லோக் சபா தேர்தலில் ஹாசனில் ஜேடி(எஸ்) வேட்பாளராக பிரஜ்வல் ரேவண்ணாவை முன்மொழிந்தால், இந்த வீடியோக்களை எதிர்க்கட்சிகள் பிரம்மாஸ்திரமாகப் பயன்படுத்தலாம். இது தேசிய அளவில் நம் கட்சியின் நற்பெயருக்கு பெரும் அடியாக இருக்கும்.” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
அதைத் தொடர்ந்து, காங்கிரஸ் தலைவர் பவன் கேரா,“தேவராஜே கவுடாவின் கடிதமும், பிரஜ்வல் ரேவண்ணா மீது பாலியல் புகார்கள் இருந்தபோதிலும், பா.ஜ.க ஏன் ஜேடி(எஸ்) உடன் இன்னும் கூட்டணியில் இருக்கிறது. இது குறித்து பிரதமர் மோடி ஏன் மவுனமாக இருக்கிறார்?” எனக் கேள்வி எழுப்பியிருக்கிறார்.
சிவசேனா (யுபிடி) தலைவர் பிரியங்கா சதுர்வேதி, “இவ்வளவு பெரிய சம்பவம் நடந்தும் தேசிய மகளிர் ஆணையத் தலைவர் ரேகா சர்மா, மத்திய அமைச்சர்கள் ஸ்மிருதி இரானி, அமித் ஷா உள்ளிட்ட தலைவர்களின் மௌனத்தால் அதிர்ச்சியடைகிறேன்” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
இதற்கிடையில், பிரஜ்வல் ரேவண்ணாவின் வீட்டில் உதவியாளராகப் பணியாற்றிய 47 வயது பெண் ஒருவர், பிரஜ்வல் ரேவண்ணா மீதும் அவரது தந்தை ஹெச்.டி.ரேவண்ணா மீதும் பாலியல் துன்புறுத்தல் புகார் அளித்திருக்கிறார். அவர் அளித்தப் புகாரில், “ரேவண்ணாவின் வீட்டில் வேலைக்கு சேர்ந்த நான்கு மாதங்களுக்குப் பிறகு, ரேவண்ணா என்னை அவருடைய அறைக்கு அழைத்தார். வீட்டில் ஆறு பெண் தொழிலாளர்கள் இருந்தார்கள். அவர்கள் அத்தனைப் பேரும் பிரஜ்வல் ரேவண்ணா வீட்டிற்கு வந்தாலே பயப்படுவதாக சொன்னார்கள்.
வீட்டிலுள்ள ஆண் தொழிலாளர்களும் பெண் தொழிலாளர்களை கவனமாக இருக்குமாறு எச்சரித்தனர். ஹெச்.டி.ரேவண்ணா அவரின் மனைவி இல்லாத போதெல்லாம், பெண்களை ஸ்டோர் ரூமிற்கு அழைப்பார். பழங்கள் கொடுக்கும்போது அவர்களைத் தொடுவார். சேலைப் பின்களை அகற்றிவிட்டு பெண்களைத் துன்புறுத்துவார். பிரஜ்வல் ரேவண்ணாவும் என்னுடைய மகளிடம் தவறாக நடக்க முயன்றார்” எனக் குறிப்பிட்டிருந்தார். அந்தப் பெண்ணின் புகாரின் அடிப்படையில், ஐபிசி பிரிவுகள் 354A, 354D, 506, மற்றும் 509 ஆகியவற்றின் கீழ் காவல்துறை வழக்குப் பதிவு செய்திருக்கிறது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/3PaAEiY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3PaAEiY