விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் துரைச்சாமிபுரம் செங்குட்டுவன் தெருவை சேர்ந்தவர் மைனர். தமிழ்நாடு காவல்துறையில் பணியாற்றி வருகிறார். இவரின் மனைவிக்கும், அதே பகுதியில் ரயில்வே மேம்பாலம் அருகே உள்ள டாஸ்மாக் பாரில் வேலை செய்யும் சரவணன் (வயது 32) என்பவருக்கும் இடையே திருமணத்தை மீறிய தொடர்பு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதையறிந்த மைனர், சரவணனை கண்டித்து வந்துள்ளார். ஆனாலும், சரவணனுக்கும்-மைனரின் மனைவிக்கும் இடையே தொடர்ந்து உறவு நீடித்து வந்துள்ளது.
இதனால் ஆத்திரமடைந்த மைனர் நேற்று இரவு, சரவணனுக்கு போன் செய்து ‘உன்னுடன் பேசவேண்டும் வா’ என அழைத்துள்ளார். மைனரின், பேச்சை நம்பி அவரை பார்ப்பதற்காக புறப்பட்ட சரவணன், அப்பகுதியில் உள்ள நகராட்சி கழிப்பிடம் அருகே வந்தபோது, அங்கு தனது நண்பர்கள் பாண்டியராஜ் மற்றும் அழகர்சாமி என்ற சூப் என்பவருடன் மறைந்திருந்த மைனர், சரவணனை வழிமறித்து அவரை தாக்கியுள்ளார். தொடர்ந்து ஆத்திரம் அடங்காத மைனர், தாங்கள் மறைத்து எடுத்துவந்த அரிவாள் மற்றும் கத்தியால் சரவணனை சரமாரியாக வெட்டியதாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தில் ரத்த வெள்ளத்தில் சரவணன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தகவல் அறிந்து அங்கு வந்த ராஜபாளையம் தெற்கு காவல்நிலைய போலீஸார் சரவணன், உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இந்தக் கொலை சம்பவம் தொடர்பாக, அளிக்கப்பட்ட புகாரின்பேரில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். கொலைசெய்துவிட்டு தப்பிச் சென்றவர்களில் பாண்டியராஜன், அழகர்சாமி ஆகியோரை போலீஸ் இன்றுகாலை கைது செய்தது. தலைமறைவான மைனரை கைதுசெய்ய தனிப்படை விரைந்துள்ளது.