நாணய மாற்றுவீதம் சந்தையில் காணப்படும் கேள்வி மற்றும் நிரம்பலின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுவதை விளங்கிக் கொள்வது மிக முக்கியமான விடயம் என இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்தார்.
ரூபாவின் பெறுமதியை வலுப்படுத்துவதன் பயனை படிப்படியாக மக்களுக்கு கிடைக்கப் பெறச் செய்துள்ளதாகவும், நாணயமாற்று வீதம் சந்தையின் கேள்வி மற்றும் விநியோகத்தின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுவதை புரிந்து கொள்ளுதல் அவசியமானது என நிதி இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார்.
ரூபாயின் பெறுமதியை பலப்படுத்துவதனால் கடனை மீளச் செலுத்தும் சுமை குறைவடைகின்றமை மிக முக்கியமானது.
அத்துடன் கொள்வனவு செய்வதற்கான இயலுமை அதிகரித்தல், பணவீக்க அழுத்தம் குறைவடைதல் மற்றும் நிதி ஸ்திரத்தன்மையை பாதுகாக்க முடியும் என்றும் அமைச்சர் இதன் போது சுட்டிக்காட்டினார்.
2022 ஆம் ஆண்டில் உத்தியோகபூர்வமாக அமெரிக்க டாலருக்கு ஈடாக ரூபாயின் பெறுமதி 360 வரை அதிகரித்ததுடன் அது 450 – 500 ரூபா வரை அதிகரிக்கலாம் என்றும் எதிர்வு கூறப்பட்டது. ஆனால் தற்போது அதன் பெறுமதி 300 ரூபா மட்டத்தில் பேணக் கூடியதாகவுள்ளதாகவும் அமைச்சர் சேமசிங்க விபரித்தார்.
பெரும் பொருளாதார சீர்திருத்தத்தின் போது முன்னேற்றத்தை அடையாளம் கண்டு, அரசாங்கம் எடுத்த பொருளாதார ஸ்திரத்தன்மைக்கான படி முறைகள் தற்போது வெற்றி அளித்துள்ளதாகவும் அதனால் நாடு புதிய அபிவிருத்திப் பாதையில் செல்வதாகவும் அமைச்சர் மேலும் தெளிவு படுத்தினார்.