`வடமாநிலங்களில் இம்முறை பாஜக சரிவைச் சந்திக்கும்.!’ – சொல்கிறார் விவசாய சங்கத் தலைவர் ராகேஷ் திகாயத்

ஈரோடு மக்களவை உறுப்பினரான மறைந்த கணேசமூர்த்தியின் நினைவஞ்சலிக் கூட்டம் தமிழக விவசாயிகள் பாதுகாப்புச் சங்கம் சார்பில் ஈரோட்டில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பாரதிய கிசான் சங்கத்தின் தேசிய செய்தித் தொடர்பாளரும், மூத்த தலைவருமான ராகேஷ் திகாயத் கலந்து கொண்டார். அதன்பின் அவர் நமக்கு அளித்த பேட்டியில், “இந்தியா கடந்த காலங்களில் விவசாயப் பொருள்களை உற்பத்தி செய்யும் நாடாக இருந்தது. ஆனால், பாஜக-வின் 10 ஆண்டுகளில் விவசாயத்தை விட்டு வெளியேறி தொழிலாளர்களாக விவசாயிகள் மாறியுள்ளனர். வடமாநிலங்களைப் பொறுத்தவரை விவசாயிகள் மட்டுமே ஒரு தொகுதியின் வெற்றி தோல்வியை நிர்ணயிப்பதில்லை.

விவசாயிகளிடமும் கட்சிரீதியாகவும், சாதி ரீதியிலும் பாகுபாடு உள்ளது. ஆனால், விவசாயிகளை பாதிக்கும் விஷயத்துக்கு அனைவரும் ஒன்று திரண்டு போராடி வருகிறோம். அந்த வகையில் இந்த ஆட்சியில் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளோம். வடமாநிலங்களில் கடந்த தேர்தலை விட பாஜக-வுக்கு வாக்கு சதவீதம் குறைவாகத்தான் கிடைக்கும். தேர்தல் ஆணைய அதிகாரிகளை சரி கட்டியும், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் முறைகேடு செய்துதான் பாஜக-வினர் வெற்றி பெறுகிறார்கள்.

ராகேஷ் திகாயத்

மீண்டும் மோடி என்ற முழக்கமும், பாஜக 400-க்கும் மேற்பட்ட இடங்களைப் பிடிக்கும் என்ற பரப்புரையும் பாஜக-வினர் திட்டமிட்டு செய்யும் விளம்பரம். வடமாநிலங்களில் பாஜக-வுக்கு செல்வாக்கு குறைந்து கொண்டே வருகிறது. குறிப்பாக உத்தரப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் பாஜக-வின் செல்வாக்கு குறைய வாய்ப்புள்ளது. பாஜக-வினருக்கு ஆதரவாளர்களை விட எதிர்ப்பாளர்கள்தான் அதிகரித்து வருகின்றனர். கடந்த காலங்களில் உத்தரப் பிரதேசம் போன்று அதிக மக்களவைத் தொகுதிகள் உள்ள மாநிலங்களில் பாஜக-வை எதிர்க்கும் கட்சிகள் ஒன்றாக இல்லாததால் சாதகமாக இருந்தது. ஆனால், இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி செயல்பாடு நன்றாக உள்ளது. அது மக்களிடம் எந்த தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது என்பதை தேர்தல் முடிவுதான் வெளிப்படுத்தும்.

பாரதிய கிசான் சங்கம் போன்ற விவசாய சங்கங்களில் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்கள் உள்ளனர். நாங்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என விவசாயிகளை நாங்கள் வலியுறுத்தவில்லை. ஆனால், யாரால் இவ்வளவு பிரச்னைகளைச் சந்திக்கிறோம். யாரை எதிர்த்து போராடுகிறோம் என்பது அவர்களுக்கே தெரியும். யாருக்கு வாக்களிக்க வேண்டுமே என விவசாயிகளே முடிவெடுப்பார்கள்.

ராகேஷ் திகாயத்

விவசாயப் பொருள்களுக்கு உரிய விலை கொடுத்தால் நாங்களே எங்களுக்குத் தேவையானவற்றை பார்த்துக் கொள்வோம். நாடு முழுவதும் ஆயிரம் உணவு தானியக் கிடங்குகள் அமைப்பது என்பது விவசாயிகளை ஏமாற்றும் வேலை. மோடியின் இந்த வாக்குறுதிகளை வடமாநில விவசாயிகள் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ஏனென்றால், கடந்த இரண்டு தேர்தல்களில் அவர் சொன்னதைத்தான் சொல்லிக் கொண்டே இருக்கிறார். எம்.எஸ்.சாமிநாதன் குழுவின் பரிந்துரைப்படி, விவசாயப் பொருள்களுக்கான ஆதார விலையை நிர்ணயித்தாலேபோதும். ஆனால், அதை செய்ய மோடி தயங்குகிறார்.

10 ஆண்டுகளுக்கு முன்பு காங்கிரஸ் ஆட்சியின்போது, எங்களுடன் சேர்ந்து பாஜக-வும் போராடியது. நாங்கள் வந்தால் விவசாயிகளுக்குத் தேவையான அனைத்தையும் செய்து தருவோம் என வாக்குறுதி அளித்தனர். ஆனால், கொடுத்த வாக்குறுதி எதையும் பாஜக நிறைவேற்றவில்லை. அதனால், எங்களுக்கு மாற்றம் தேவைப்படுகிறது. மத்தியில் அடுத்து அமையும் ஆட்சியும் விவசாயிகளுக்கு எதிராக இருந்தால் போராடுவதை தவிர எங்களுக்கு வேறு வழியில்லை.

ராகேஷ் திகாயத்

பாஜக கடந்த 10 ஆண்டுகளில் பேச மட்டுமே செய்துள்ளது. விவசாயிகள் மட்டுமல்ல பழங்குடியினர், தொழிலாளர்கள் என எந்த தரப்புக்கும் அவர்கள் சொல்லிக் கொள்ளும்படி எந்த திட்டத்தையும் நிறைவேற்றவில்லை. பாஜக-வின் ஒரே நோக்கம் விவசாயிகளிடம் இருந்து நிலத்தைப் பிடுங்குவது மட்டும்தான். பாஜக நினைத்தாலும் இதைத் தடுக்க முடியாது ஏனென்றால் கார்ப்பரேட் கைகளில் அக்கட்சி சென்றுவிட்டது” என்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3OITqxs

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.